/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சொரக்காய்பேட்டைக்கு இருவழி பாதை அமையுமா?
/
சொரக்காய்பேட்டைக்கு இருவழி பாதை அமையுமா?
ADDED : செப் 20, 2024 08:00 PM
பள்ளிப்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், தச்சூரில் இருந்து பள்ளிப்பட்டு வழியாக, ஆந்திர மாநிலம் சித்துார் வரை ஆறு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் சொரக்காய்பேட்டை, மேலப்பூடி அருகே முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில், சொரக்காய்பேட்டையில் இருந்து மேலப்பூடி காலனி வழியாக பொம்மராஜபேட்டை மற்றும் பொதட்டூர்பேட்டை செல்ல வசதியாக மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலப்பூடி வழியாக ஒரு வழி சாலை உள்ளது. இந்த வழியாக இரண்டு வாகனங்கள் செல்ல போதிய இடவசதி இல்லாததால், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மேலப்பூடி மற்றும் தொட்டிபாளையம் வழியாக பள்ளிப்பட்டு செல்லும் சாலையிலும் மேம்பாலம் அமைத்து சொரக்காய்பேட்டைக்கு மற்றொரு ஒருவழி பாதை அமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதன் வாயிலாக, சொரக்காய்பேட்டை பகுதிவாசிகள் மற்றும் சொரக்காய்பேட்டை வழியாக நெடியம் தரைப்பாலத்தை கடந்து ஆந்திர மாநிலம் நகரி செல்பவர்களும் போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதாக பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.