/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொகுப்பு வீடு கட்ட வழங்கப்படும் கம்பிகள் திருவாலங்காடில் வீணாகும் அவலம்
/
தொகுப்பு வீடு கட்ட வழங்கப்படும் கம்பிகள் திருவாலங்காடில் வீணாகும் அவலம்
தொகுப்பு வீடு கட்ட வழங்கப்படும் கம்பிகள் திருவாலங்காடில் வீணாகும் அவலம்
தொகுப்பு வீடு கட்ட வழங்கப்படும் கம்பிகள் திருவாலங்காடில் வீணாகும் அவலம்
ADDED : ஜன 07, 2025 06:55 AM

திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிக்கு, பசுமை வீடு, பாரத பிரதமர் குடியிருப்பு தொகுப்பு வீடுகள் மற்றும் தனிநபர் கழிப்பறைகள் கட்டித் தரப்படுகின்றன.வீடு கட்டும் பணிக்கு, முறுக்கு கம்பிகள், தமிழக அரசு வாயிலாக, வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது.
அங்கு, தொகுப்பு வீடுகள் கட்டும் பயனாளிகளை வரவழைத்து, கம்பிகளை, வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்குவார்.
தொகுப்பு வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு வழங்க, பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் முறுக்கு கம்பிகள், திருவாலங்காடு ஒன்றிய அலுவலக வளாகத்துக்கு, கடந்த மாதம் கொண்டு வரப்பட்டு, திறந்தவெளியில் போடப்பட்டுள்ளன.
மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, துருப்பிடித்து, அதன் உறுதித்தன்மையை இழந்து வருகிறது. மேலும், திறந்தவெளியில் போடப்பட்டுள்ளதால், பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
இதுகுறித்து, தொகுப்பு வீடுகள் கட்டும் பயனாளிகள் கூறியதாவது:
வீடு கட்ட பணி உத்தரவு வந்ததும், கம்பி, கதவுகளை, அதிகாரிகள் வரவழைத்து விடுகின்றனர். கட்டடம் கட்ட, பணம் தாமதமாக கொடுக்கப்படுகிறது.இதனால், கம்பிகள் அலுவலகத்தில் தேங்கி வீணாகி வருகின்றன. பணத்தை குறித்த நேரத்தில் வழங்கினால், கம்பிகளை எடுத்துச் சென்று, கட்டட பணியை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொகுப்பு வீடுகளுக்கு, அவ்வப்போது தேவையான இரும்பு கம்பி, கதவுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறோம். இவற்றை வைக்க கிடங்கு வசதியில்லாததால், அலுவலக வளாகத்தில் தரைப்பகுதியில் வைக்க வேண்டியுள்ளது.
வாட்ச்மேன் உள்ளதால் திருடு போகாது. மாற்று இடம் தேர்வு செய்து, துருப்பிடிக்காதபடி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.கட்டுமானப் பணிகளுக்கு ஏற்ப, நிதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.