/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதிய பஸ்கள் இல்லாமல் மாணவ - மாணவியர்... ஆபத்தான பயணம்!:விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுவது தொடர்கதை
/
போதிய பஸ்கள் இல்லாமல் மாணவ - மாணவியர்... ஆபத்தான பயணம்!:விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுவது தொடர்கதை
போதிய பஸ்கள் இல்லாமல் மாணவ - மாணவியர்... ஆபத்தான பயணம்!:விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுவது தொடர்கதை
போதிய பஸ்கள் இல்லாமல் மாணவ - மாணவியர்... ஆபத்தான பயணம்!:விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுவது தொடர்கதை
ADDED : ஆக 20, 2025 02:07 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் போதிய அரசு பேருந்துகள் இல்லாததால், அரசு பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும், கால்களை இழப்பதும் தொடர்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியத்தில், 59 துவக்கப் பள்ளிகள், 17 நடுநிலைப் பள்ளிகள், 14 உயர்நிலைப் பள்ளிகள், ஆறு மேல்நிலைப் பள்ளிகள் என, 96 அரசு பள்ளிகள் உள்ளன.
காத்திருப்பு இந்த ஒன்றியத்தில் உள்ள திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி, மப்பேடு - சுங்குவார்சத்திரம், மணவாளநகர் - ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர் - பூந்தமல்லி ஆகிய நெடுஞ்சாலை வழியே செல்லும் மாநகர பேருந்துகள் மற்றும் விழுப்புர கோட்ட அரசு பேருந்துகளில், மாணவ - மாணவியர் சென்று வருகின்றனர்.
இதில், திருவள்ளூர் - பூந்தமல்லி இடையே, தடம் எண்: 597 என்ற மாநகர பேருந்து, மணவாளநகர் - ஸ்ரீபெரும்புதுார் இடையே, தடம் எண்: 583 என்ற மாநகர பேருந்து மற்றும் 82சி விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், கடம்பத்துார் - சுங்குவார்சத்திரம் இடையே, தடம் எண்: 14பி என்ற விழுப்புரம் கோட்ட அரசு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.
மாநகர பேருந்துகள் பல இயக்கப்பட்டு வந்தாலும், காலை - மாலை நேரங்களில் முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால், மாணவர்கள் பல மணி நேரம் காத்திருந்து ஷேர் ஆட்டோக்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது.
மேலும், மாநகர பேருந்துகளின் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
இரண்டு மாதங்களில், திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மாநகர பேருந்தில் சென்ற கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு விபத்தில் கால்கள் முறிந்தன.
அதேபோல், மணவளநகர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், அரசு பேருந்தில் சென்ற மேல்நல்லாத்துார் மாணவன் தவறி கீழே விழுந்ததில், கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறுகிறார்.
உயிரிழப்பு மேலும், மப்பேடு - சுங்குவார்சத்திரம் பகுதியில், 14பி என்ற விழுப்புரம் கோட்ட பேருந்து மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து முறையாக இயக்கப்படுவதில்லை.
இந்த தடத்தில் செல்லும் தனியார் பேருந்தில், சில நாட்களுக்கு முன் பயணித்த மாணவன் தவறி கீழே விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இலவச பஸ் பாஸ் இருந்தும், முறையாக அரசு பஸ் இயக்கப்படாததால், மாணவ - மாணவியர் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவதோடு, ஷேர் ஆட்டோக்களில் ஆபத்தான முறையில் செல்கின்றனர்.
தற்போது, திருவள்ளூர் கலெக்டர் உத்தரவுப்படி, பள்ளி முடிந்த பின், மாணவ - மாணவியருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த சிறப்பு வகுப்புகள் நிறைவடைந்ததும், பேருந்துகள் இல்லாமல் மாணவ - மாணவியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
சில நேரங்களில் மாணவர்களை ஏற்ற மறுத்து, மாநகர பேருந்துகள் சென்று விடுவதால், மாணவ - மாணவியர் வீடுகளுக்கு செல்வதில் கூடுதல் நேரமாவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலை வழியே அரசு பேருந்துகளை முறையாக இயக்கவும், கூடுதல் அரசு பேருந்துகளை இயக்கவும், மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.