/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மண் குவாரியில் பெண் தர்ணா வெங்கல் அருகே பரபரப்பு
/
மண் குவாரியில் பெண் தர்ணா வெங்கல் அருகே பரபரப்பு
ADDED : ஆக 10, 2025 12:38 AM
வெங்கல்,:சவுடு மண் குவாரியில் வேலை கேட்ட கணவரை காணவில்லை எனக் கூறி, லாரிகளை மறித்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
வெங்கல் அருகே யானைப்பாக்கம் பகுதியில் செயல்படும் சவுடு மண் குவாரியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, 15 அடிக்கு மேல் சவுடு மண் அள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ராபர்ட் என்பவர், நேற்று காலை, யானைப்பாக்கம் குவாரியில் இருந்து சவுடு மண் ஏற்றிவந்த லாரிகளை, கல்பட்டு வழியே மறித்து, தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு, குவாரியில் வேலை கேட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார், ராபர்ட்டை கைது செய்து விசாரணை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராபர்ட்டின் மனைவி, பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது, ராபர்ட்டை இங்கு அழைத்து வரவில்லை என, போலீசார் கூறியதால் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, கல்பட்டு பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட சவுடு மண் ஏற்றி வந்த லாரிகளை மறித்து, சாலையில் அமர்ந்து, தன் கணவனை மீட்டுத் தரக்கோரி தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனால், வெங்கல் - சீத்தஞ்சேரி சாலையில், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தினர்.