/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெருகி வரும் 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்களால்...கடனாளியாகும் மகளிர்
/
பெருகி வரும் 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்களால்...கடனாளியாகும் மகளிர்
பெருகி வரும் 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்களால்...கடனாளியாகும் மகளிர்
பெருகி வரும் 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்களால்...கடனாளியாகும் மகளிர்
UPDATED : ஏப் 21, 2025 08:33 AM
ADDED : ஏப் 20, 2025 08:44 PM

திருவாலங்காடு:மாவட்டத்தில் 'மைக்ரோ, ஸ்மால் பைனான்ஸ்' நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை அணுகி, கடன் வலையில் வீழ்த்துவது பெருகி வருகிறது. இதனால், மகளிர் கடனாளிகளாகி வருவதாகவும், இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக மகளிர் திட்டம் செயல்படுகிறது. 1989ல் தர்மபுரி மாவட்டத்தில், பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி நிறுவன உதவியுடன், மகளிர் சுய உதவிக்குழு அமைக்கும் திட்டம் துவக்கப்பட்டது.
ஒரே பகுதியைச் சேர்ந்த 18 - 60 வயதிற்கு உட்பட்ட 12 - 20 வரையிலான எண்ணிக்கையில் மகளிரை குழுவாக கொண்ட சுய உதவிக்குழுக்களாக வளர்ந்துள்ளன. சமூக, பொருளாதார மேம்பாடு மட்டுமின்றி மகளிரின் திறன் வளர்ப்பு பயிற்சி, தொழில் வாய்ப்புகள், கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து அரசு, வங்கி, கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படுகிறது.
தற்போது, தமிழகம் முழுதும் 7.22 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இதன் வாயிலாக விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர் என, பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரமாக, பெரும்பாலான இடங்களில், இக்குழுவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, கடம்பத்தூர் உட்பட 14 ஒன்றியங்களில், 20,000க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன.
ஊராட்சி, வட்டார, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளையும் அரசு ஏற்படுத்தி கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட 'மைக்ரோ, ஸ்மால் பைனான்ஸ்' நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை மையமாக வைத்து, உடனடி கடன் வழங்கி வருகின்றன. பணம் விரைவாக கிடைப்பதால், பல்வேறு பகுதிகளிலும் மகளிர் குழுவினர் 'பைனான்ஸ்' முறையில் கடன் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவர்கள், சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள கடன் வழங்கப்படுகிறது. ஆனால், கடன் பெறும் பல மகளிர் குழுவினர், பெரும்பாலும் சுயதொழில் செய்வது இல்லை. பிற செலவினங்களுக்கு இத்தொகையை பயன்படுத்துகின்றனர்.
இதனால், பலர் வாங்கிய கடனை முறையாக செலுத்த வேறு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பொதுவாக கடன் வாங்க, ஒருவர் விண்ணப்பிக்கும் போது, வங்கி 'சிபில் ஸ்கோர்' என்கிற நடைமுறையை வைத்து கடன் வழங்கப்படுகிறது.
ஆனால், 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்கள், இத்தகைய நடைமுறைகளை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் தாராளமாக கடன் வழங்கி, மகளிரை கடனாளியாக்கி வருகின்றனர்.

