/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் மருத்துவமனை அலட்சியம் வாலிபருக்கு ரூ.3.27 லட்சம் இழப்பீடு
/
தனியார் மருத்துவமனை அலட்சியம் வாலிபருக்கு ரூ.3.27 லட்சம் இழப்பீடு
தனியார் மருத்துவமனை அலட்சியம் வாலிபருக்கு ரூ.3.27 லட்சம் இழப்பீடு
தனியார் மருத்துவமனை அலட்சியம் வாலிபருக்கு ரூ.3.27 லட்சம் இழப்பீடு
ADDED : ஆக 26, 2025 10:23 PM
திருவள்ளூர்:வாலிபருக்கு அளித்த சிகிச்சையில் தனியார் மருத்துவமனை அலட்சியம் காட்டியதால், 3.27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென, திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை பாடியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ், 25. இவர் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
இவர் 2024 ஜன., 10ம் தேதி மாலை, வீட்டின் மாடிக்கு சென்ற போது, அங்கிருந்த இரும்பு கம்பி அவரது கையில் கிழித்துள்ளது. சூர்ய பிரகாஷை அவரது பெற்றோர், பாடியில் உள்ள ராஜம் நர்சிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பணியில் இருந்த செவிலியர், சூர்யபிரகாஷின் இடுப்பில் ஊசி போடும்போது எதிர்பாராதவிதமாக ஊசி உடைந்து அவரது இடுப்பிலேயே சிக்கியது. பின், அண்ணா நகரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இடுப்பிலிருந்த ஊசி அகற்றப்பட்டது.
இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் சூர்யபிரகாஷின் தந்தை லோக சந்துரு புகார் அளித்தார்.
மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் அலட்சியமாக செயல்பட்டதால் ஏற்பட்ட மருத்துவ செலவு மற்றும் மன உளைச்சலுக்கு, மருத்துவமனை நிர்வாகம் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க கோரி, திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் சூர்ய பிரகாஷ் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த திருவள்ளூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் லதா மகேஸ்வரி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். தீர்ப்பில், பாதிக்கப்பட்ட நபருக்கு வேறொரு மருத்துவமனை மூலம் சிகிச்சை செய்ததற்கான செலவு, ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 242 ரூபாய் வழங்க வேண்டும்.
மேலும், நோயாளியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவுக்கு 10,000 ரூபாய் என, மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 242 ரூபாயை ஆறு வாரங்களுக்குள் வழங்க, ராஜம் நர்சிங் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.