/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபர் வெட்டிக்கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்
/
வாலிபர் வெட்டிக்கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்
ADDED : நவ 21, 2025 03:45 AM

மீஞ்சூர்: மீஞ்சூர் அருகே மர்ம நபர்களால் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு மேட்டுக்காலனி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித், 25. எண்ணுார் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்த்து வந்தார். இவர் இரண்டு மாதங்களாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
நேற்று முன்தினம் மாலை நண்பர் ஒருவருடன் வெளியில் சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. ரஞ்சித்தை, அவரது குடும்பத்தினர் தேடினர். அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை, அதே கிராமத்தில், ஒதுக்குப்புறமான இடத்தில் ரஞ்சித் தலை, கை, கால் என உடல் முழுதும் வெட்டுகாயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ரஞ்சித்தின் உடலை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கொலைக்கான காரணம், கொலையில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஞ்சித் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றியதால், அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக கிராமத்தில் உள்ள சிலருடன் இருந்த முன்விரோதம் காரணமாக ரஞ்சித் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர்.
கொலையாளிகள் பிடிபட்டால் கொலைக்கான காரணம் தெரிய வரும் என, போலீசார் தெரிவிக்கின்றனர்.

