/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
திருவாரூரில் சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டது
/
திருவாரூரில் சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டது
ADDED : பிப் 25, 2025 07:27 AM

திருவாரூர் : திருவாரூரில், நேற்று சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், பேரளம் - காரைக்கால் இடையே, அகல ரயில் பாதை பணி நடந்து வருகிறது. இதற்காக, திருவாரூரில் ஜல்லி கற்கள் இருப்பு வைக்கப்பட்டு, தினமும் சரக்கு ரயிலில், பேரளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பேரளம் - காரைக்கால் இடையே அகல ரயில் பாதையில் கொட்டப்படுகிறது.
நேற்று காலை, 7:45 மணிக்கு, 12 பெட்டிகளில் ஜல்லிகற்கள் ஏற்றப்பட்ட சரக்கு ரயில் பின்னோக்கி எடுக்கப்பட்டது. அப்போது, இன்ஜினின் மூன்று சக்கரங்கள், தண்டவாளத்தைவிட்டு இறங்கின. இன்ஜின் டிரைவர், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர்.
நுாற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள், தடம் புரண்ட இன்ஜினை, ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின், தண்டவாளத்தில் நிறுத்தினர். இந்த ரயில், ரயில்வே பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என, அதிகாரிகள் கூறினர்.
இன்ஜின் தடம் புரண்ட தால், அகஸ்தம்பள்ளியில் இருந்து, திருவாரூர் நோக்கி வந்த பயணியர் ரயில், ஒரு மணி நேரம் தாமதமாக, பட்டுக்கோட்டை புறப்பட்டு சென்றது.