UPDATED : அக் 19, 2026 07:14 PM
ADDED : அக் 19, 2026 06:16 PM

திருவாரூர்: சரஸ்வதி பூஜையை, முன்னிட்டு, சரஸ்வதிக்கு என தனி கோவிலான கூத்தனுார் மகா சரஸ்வதி அம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள், நோட்டு, பேனா வைத்து, குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்னிந்தியாவிலேயே, திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனுார் கிராமத்தில், ஸ்ரீ மகா சரஸ்வதி அம்மனுக்கு என்று தனி கோவில் அமைந்துள்ளது. தமிழ் புலவர் ஒட்டக்கூத்தர் வாழ்ந்து வழிபட்ட ஊர் என்பதால், இவ்வூருக்கு, கூத்தனூர் என பெயர் வந்தது.
பிரசித்தி பெற்ற, இக்கோவிலில், ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, நேற்று மகா சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதணை நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் குழந்தைகளை அழைத்து, வந்து அவர்கள் கைகளால் நோட்டு, பேனா உள்ளிட்ட எழுது பொருட்களை வாங்கி, மகா சரஸ்வதி அம்மனின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.
வெண்ணிற பட்டு உடையில், கையில் வீனையுடன் சரஸ்வதி காட்சியளித்தார். தொடர்ந்து, இன்று விஜயதசமி தினத்தில், புதிதாக பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து, வழிபாட, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
