/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
திருவோணமங்கலம் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
/
திருவோணமங்கலம் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
ADDED : ஜன 02, 2025 07:16 AM

வலங்கைமான்; புத்தாண்டை முன்னிட்டு, திருவோணமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, ஆலங்குடி அருகே உள்ள திருவோணமங்கலம் கிராமம், ஞானபுரி சித்ரகூட ஷேத்திரத்தில் சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி, இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்கள் தீர்க்கும் சஞ்சீவி மூலிகையுடன் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, ஜகத்குரு பதரீ சங்கராச்சார்ய ஸ்ரீ க்ஷேத்ர சகடபுர ஸ்ரீவித்யபீட ஆச்சார்ய மகா சுவாமிகள் சிறப்பு அபிஷேகம் செய்தார்.
பால், பன்னீர் உள்பட 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பின், வெள்ளி ரத ஊர்வலம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். பக்தர்களுக்கு, பூஜை செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீகார்யம் நிர்வாகி சந்திரமவுலீஸ்வரன், தர்மாதிகாரி ரமணி அண்ணா ஆகியோர் செய்திருந்தனர்.

