/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்
/
திருச்செந்துார் கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்
ADDED : செப் 03, 2024 02:33 AM

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை வேளையில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி அம்மன் தனித்தனி சப்பரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து சிவன் கோவில் சேர்ந்தனர்.
பத்தாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. காலை, 6:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.
காலை, 6:05 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். 6:35 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் இழுத்தனர். அந்த தேர் ரதவீதிகள் சுற்றி சரியாக, 7:03 மணிக்கு நிலைக்கு வந்தது. இதையடுத்து சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேரை 7:07 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
அப்போது 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா' என்ற பக்தி கோஷம் முழங்கியது. ரதவீதிகளை சுற்றிய தேர் 7:57 மணிக்கு நிலைக்கு வந்தது. தொடர்ந்து வள்ளியம்மன் வீ்ற்றிருந்த தேரை 8:00 மணிக்கு பக்தர்கள் இழுத்தனர். அந்த தேர் வீதிகள் சுற்றி நிலையை அடைந்தது.
நிகழ்ச்சியில் அறங்காவலர் ராமதாஸ், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாலை 4:30 மணிக்கு சுவாமி, அம்மன் சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு முதலியார் மண்டகப்படி சேர்ந்தார்.
அங்கு தீபாராதனை ஆனதும் சன்னதிதெருவில் உள்ள திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க மண்டகப்படியில் சுவாமி, அம்மன் சேர்ந்தனர். அங்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி, அம்மன் சிவன் கோவில் சேர்ந்தனர். இரவு சுவாமி அம்மன் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.