/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கனிமொழி எம்.பி.,யிடம் மீனவ மக்கள் வாக்குவாதம்
/
கனிமொழி எம்.பி.,யிடம் மீனவ மக்கள் வாக்குவாதம்
ADDED : ஆக 22, 2024 02:14 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா, 45, மைக்கேல் தேன் தெனிலா, 43, ஆகியோருக்கு சொந்தமான படகுகளில் மீன்பிடிக்க சென்ற, 22 மீனவர்கள் கடந்த 5ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்; இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் 22 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு, வாரியபொல சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். செப்., 3 வரை அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும் என, தருவைகுளம் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க கனிமொழி எம்.பி., ஓட்டப்பிடாரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., சண்முகையா ஆகியோர் சென்றனர்.
சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் கனிமொழி எம்.பி., மற்றும் சண்முகையா எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். '22 மீனவர்களையும் மீட்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என குற்றம்சாட்டினர். கனிமொழியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேசிய, எம்.பி., கனிமொழி, 'மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, வெளியுறவு அமைச்சர், அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறோம், படகுகள் விவகாரத்தில், ஓரளவுக்கு மேல் வலியுறுத்த முடியவில்லை' என்றார். இருப்பினும், தொடர்ந்து கனிமொழியிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் நீடித்ததால், ஓரளவு பேசி சமாளித்த கனிமொழி எம்.பி., அங்கிருந்து சென்றார்.