/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மீன் பதப்படுத்தும் ஆலையில் திடீர் தீ விபத்து 30 பெண்கள் மயக்கம்
/
மீன் பதப்படுத்தும் ஆலையில் திடீர் தீ விபத்து 30 பெண்கள் மயக்கம்
மீன் பதப்படுத்தும் ஆலையில் திடீர் தீ விபத்து 30 பெண்கள் மயக்கம்
மீன் பதப்படுத்தும் ஆலையில் திடீர் தீ விபத்து 30 பெண்கள் மயக்கம்
ADDED : ஜூலை 21, 2024 06:56 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி, எட்டயபுரம் சாலையில், 'நிலா சீ புட்ஸ்' என்ற மீன் பதப்படுத்தும் ஆலை உள்ளது. இங்கு, மீன்களை சுத்தம் செய்து, பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில், 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. புகை மண்டலம் கிளம்பியதால் பணியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கமடைந்தனர்.
ஆலை நிர்வாக வாகனங்கள் வாயிலாக, அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆலையில், அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் மயக்கமடைந்ததாக தகவல் பரவியதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வாயிலாக, நான்கு மணி நேர போராட்டத்துக்குப் பின் ஆலையில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. அமோனியா வாயு கசிவு ஏதும் ஏற்படவில்லை என, ஆலை நிர்வாகம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தது.
இதற்கிடையே, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி தலைமையிலான குழுவினர் ஆலையில் ஆய்வு செய்தனர்.
மேலும், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலைக்குள் சென்று தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். விபத்து காரணமாக ஆலையின் செயல்பாடு நேற்று நிறுத்தப்பட்டது. பணிக்கு வந்த தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த ஆலையில் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
விபத்து குறித்து அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கான சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் லட்சுமிபதி உடனிருந்தனர்.
பின், அமைச்சர் அளித்த பேட்டி:
நிலா சீ புட்ஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக புகை மண்டலம் ஏற்பட்டிருக்கிறது. அதிக புகையால் மயக்கமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், எட்டு பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்; 23 பேர் ஓரிரு நாளில் வீடு திரும்புவர். அமோனியா வாயு கசிவுக்கு வாய்ப்பு இல்லை. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறோம்.
தொழிலாளர்களை ஆலை நிர்வாகம் முறையாக பாதுகாத்து வருகிறது. விபத்து நடந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தினருடன் சேர்ந்து முழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிலா சீ புட்ஸ் பொது மேலாளர் வேல்முருகன் கூறியதாவது:
முதல் தளத்தில் அமைந்துள்ள யூனிட்டில் மின் கசிவு ஏற்பட்டு புகை மண்டலம் எழுந்ததால் தொழிலாளர்கள், 30 பேருக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டது.
தீ விபத்து நிகழ்ந்த போது யூனிட்டில் யாரும் பணியில் இல்லை. உணவு இடைவேளைக்கு சென்ற போது விபத்து நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நலமுடன் உள்ளனர். முற்றிலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமோனியா வாயு கசிவு எதுவும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.