sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

350 ஆண்டுகளுக்கு முன் கிறித்துவ ஆலயத்தை பாதுகாத்த எட்டையபுரம் பாளையக்காரர்கள்

/

350 ஆண்டுகளுக்கு முன் கிறித்துவ ஆலயத்தை பாதுகாத்த எட்டையபுரம் பாளையக்காரர்கள்

350 ஆண்டுகளுக்கு முன் கிறித்துவ ஆலயத்தை பாதுகாத்த எட்டையபுரம் பாளையக்காரர்கள்

350 ஆண்டுகளுக்கு முன் கிறித்துவ ஆலயத்தை பாதுகாத்த எட்டையபுரம் பாளையக்காரர்கள்


ADDED : ஜூன் 11, 2024 08:34 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 08:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி தேவாலயம், குருக்கள் மற்றம் சிஷ்யர்களுக்கு எட்டையபுரம் பாளையக்காரர்களான செகவீர மற்றும் திசவீர எட்டப்ப நாயக்கர்கள் பாதுகாப்புக் கொடுத்ததை அங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

இதுவரை ஆவணப்படுத்தப்படாத அந்தக் கல்வெட்டை படியெடுத்துப் படித்து ஆய்வு செய்தபின், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, நுார்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது:

தமிழகத்துக்கு போர்ச்சுகீசியர்கள் வணிகம் செய்ய வந்தபோது, சேசுசபை மூலம் கத்தோலிக்க கிறித்துவம் பரவியது. அச்சமயம் மதுரை சேசுசபையினரால், கி.பி. 1600-ல் காமநாயக்கன்பட்டியில் ஒரு தேவாலயம் அமைக்கப்பட்டது. புனித அருளானந்தர், வீரமாமுனிவர் ஆகியோர் சமயப் பணி ஆற்றியுள்ளனர்.

கத்தோலிக்கத் திருத்தலத்தில், 300 ஆண்டுகளுக்கு முன், மாதாவின் தேர்பவனி முதன்முறையாக வீரமாமுனிவர் காலத்தில் இங்கு தான் தொடங்கப்பட்டது. அதன் சாட்சியாக பூவரச மரத்தில் செய்யப்பட்ட மிகப் பெரிய இரு தேர்கள் இன்றும் உள்ளன.

எட்டையபுரம் பாளையக்காரருக்கு நன்கு அறிமுகமான சேவியர் போர்க்கீசு என்ற பாதிரியார் இங்கு பணிபுரிந்தபோது, திசவீர எட்டப்ப நாயக்கர் நேரில் வந்து ஆலயத்துக்கு யாரும் இடையூறு கொடுக்கக் கூடாது என ஆணையிட்டு கொல்லம் ஆண்டு 863ல் கல்வெட்டு வெட்டிக் கொடுத்துள்ளார்.

தேவாலய முன் வாசலின் தென்பகுதியில் உள்ள கல்வெட்டின் தற்போதைய ஆண்டு கி.பி. 1688 ஆகும்.

'செகவீர எட்டப்பனாயக்கரவர்கள் நம்முடைய சீமையிலே சறுவேசுரனுடைய இந்தக் கோவிலும் ரோமாபுரிச் சன்னாசிகளுடைய மடமும் நம்முடைய தகப்பனார் காலத்திலே இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன் ஒரு விக்கனமும் இல்லாமல் நடத்திக் கொண்டு வந்ததினாலே, இப்போது நாமும் அப்படி தானே நடத்திவிக்க வேணும்.

'இந்தக் கோவிலும் இதிலே இருக்கப்பட்ட குருக்களையும் வந்து சந்திச்சு இப்படிக்குக் கல்லும் வெட்டி விச்சுக் குடுத்தோம்.

'ஆனபடியினாலே இந்தச் சறுவேசுரனுடைய கோவிலுக்கும் குருக்களுக்கும் அவர்களுடைய சிஷ்யர்களுக்கும் யாதொரு விக்கினம் பண்ணுகிறவன் நமக்குத் துரோகியாய்ப் போறதுமில்லாமல் கெங்கைக் கரையிலே காராம் பசுவையும் பிராமணரையும் கொன்ன தோஷத்திலே போவாராகவும். இப்படிக்கு சந்திர, சூரியன் உள்ள வரைக்கும் கட்டளை இட்டோம். திசவீர எட்டப்பனாயக்கர் சுவாமி லட்ச சித்து' என, கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

எட்டையபுரம் பாளையக்காரர் செகவீர எட்டப்பநாயக்கர் கி.பி. 1663ம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கு தன்னுடைய சீமையில் உள்ள சறுவேசுரன் கோவில் மற்றும் ரோமாபுரி சன்னாசிகள் மடம் ஆகியவற்றிற்கு எந்த இடையூறுமின்றி அதற்குப் பாதுகாப்புக் கொடுத்து நடத்திக் கொண்டு வந்திருக்கிறார்.

தன் தகப்பனார் செய்ததை, தானும் அப்படியே தொடர்ந்து நடத்த விரும்புவதாக, இந்தக் கோவிலுக்கு வந்து இங்கிருந்த குருக்களை கி.பி. 1688ல் சித்திரை மாதம் 10ம் நாள் சந்தித்து அதைக் கல்வெட்டாகவும் வெட்டிக் கொடுத்துள்ளார் அவர் மகன் திசவீர எட்டப்ப நாயக்கர்.

கல்வெட்டின் இறுதியில் வரும் ஓம்படைக்கிளவி ஆட்சியாளர்களால் கொடுக்கப்படும் தர்மத்துக்கு, யாராவது கெடுதல் செய்தால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைப் பற்றிக் கூறுவதாகும். அக்கல்வெட்டின் ஓம்படைக்கிளவி, இந்தச் சறுவேசுரனுடைய கோவிலுக்கும், குருக்களுக்கும் அவர்களுடைய சிஷ்யர்களுக்கும் ஏதாவதொரு பிரச்னை பண்ணுகிறவன் தனக்குத் துரோகியாவான் என்பதால், எட்டையபுரம் பாளையக்காரர்கள் பல தலைமுறைகளாக இந்த தேவாலயத்தை பாதுகாத்து வந்துள்ளதை அறிய முடிகிறது.

விஜயநகர, நாயக்கர் கால சைவ, வைணவக் கோவில் கல்வெட்டுகளில் சொல்லப்படும் ஓம்படைக்கிளவி இக்கல்வெட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இத்தேவாலயம் பலமுறை எரிக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் வந்துள்ளது. மீண்டும் மீண்டும் இதைக் கட்டி எழுப்பியிருக்கின்றனர்.

அத்தகைய இடையூறுகளை முடிவுக்குக் கொண்டுவர எட்டையபுரம் பாளையக்காரரின் இக்கல்வெட்டு உறுதுணையாக இருந்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்துவ ஆலயங்கள், அக்காலக் கல்வெட்டு, செப்பேடுகளில் சறுவேசுரன் கோவில் எனப்படுவது போல இதுவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us