/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
16 வயது சிறுவன் ஓட்டிய கார் கடைக்குள் புகுந்தது
/
16 வயது சிறுவன் ஓட்டிய கார் கடைக்குள் புகுந்தது
ADDED : ஏப் 28, 2024 01:55 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜிவ் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், தன் தாயுடன் கோவில்பட்டி மாதாங்கோவில் சாலையில் டாடா கிரெட்டா காரில் நேற்று சென்று கொண்டு இருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென டூ - வீலரில் சென்ற ஒருவர் மீது மோதியது. தொடர்ந்து, சமுத்திரபாண்டி என்பவருக்கு சொந்தமான மிட்டாய் கடைக்குள் கார் புகுந்தது.
இதைக் கண்டதும் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த சமுத்திரபாண்டி அலறியடித்தபடி வெளியேறினார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இரண்டு மணி நேரத்திற்கு பின், கார் அங்கிருந்து அகற்றப்பட்டது. ஆனால், யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. கட்டுப்பாட்டை இழந்த கார் கடைக்குள் புகுந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகின.
இதுகுறித்து, அந்தப் பகுதி வியாபாரிகள் கூறியதாவது:
மெயின் ரோட்டில் கார் திரும்பியபோது திடீரென டூ - வீலரில் சென்றவர் மீது மோதியபடி, மிட்டாய் கடைக்குள் புகுந்தது. காரை ஓட்டிச் சென்ற சிறுவனும், அவரது தாயும் அங்கிருந்து சென்றுவிட்டனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்து விட்டனர்.
டூ - வீலரில் வந்தவர், மிட்டாய் கடை வியாபாரி ஆகியோருக்கு குறிப்பிட்டத் தொகையை இழப்பீடாக கொடுத்துள்ளனர். 18 வயதுக்கு உட்பட்ட யாரேனும் டூ - வீலர், கார் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுஉள்ளது.
ஆனால், கோர்ட் உத்தரவுபடி போலீசார் செயல்படவில்லை. சம்பந்தபட்ட பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐகோர்ட் உத்தரவை மீறிய போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

