/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பெற்றோரை காப்பாற்ற போராடிய மகள்
/
பெற்றோரை காப்பாற்ற போராடிய மகள்
ADDED : ஆக 13, 2024 11:39 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே குளத்துவாய்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன், 49; அப்பகுதியில் தோட்டம் அமைத்து, விவசாயம் செய்து வருகிறார்.
இவரது மனைவி கிருஷ்ணவேணி, 46. தம்பதிக்குள் நேற்று திடீரென பிரச்னை ஏற்பட்டது. கோபித்துக்கொண்ட கிருஷ்ணவேணி, அங்கிருந்து ஓடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட கண்ணன், மனைவியை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தார். இருவரும் வெளியே வர முடியாமல் கிணற்றில் தத்தளித்தனர்.
இதைப் பார்த்த அவர்களது மகள் அபர்ணா, 23, தோட்டத்தில் கிடந்த நீளமான கயிற்றை எடுத்து கிணற்றுக்குள் வீசினார். அந்த கயிற்றை பிடித்துக் கொண்ட கண்ணன், மனைவி கிருஷ்ணவேணியை தண்ணீரில் மூழ்க விடாமல் காப்பாற்ற முயற்சித்தார்.
தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் குதித்து இருவரையும், இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர். பெற்றோர் கிணற்றுக்குள் தவித்தபோது, சமயோசிதமாக செயல்பட்ட அபர்ணாவை தீயணைப்பு வீரர்கள் பாராட்டினர்.