/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பஸ்சில் இருந்து வெளியே இழுத்து பிளஸ் 1 மாணவருக்கு சரமாரி வெட்டு; பயணியர் அலறல்; ஸ்ரீவைகுண்டத்தில் பயங்கரம்
/
பஸ்சில் இருந்து வெளியே இழுத்து பிளஸ் 1 மாணவருக்கு சரமாரி வெட்டு; பயணியர் அலறல்; ஸ்ரீவைகுண்டத்தில் பயங்கரம்
பஸ்சில் இருந்து வெளியே இழுத்து பிளஸ் 1 மாணவருக்கு சரமாரி வெட்டு; பயணியர் அலறல்; ஸ்ரீவைகுண்டத்தில் பயங்கரம்
பஸ்சில் இருந்து வெளியே இழுத்து பிளஸ் 1 மாணவருக்கு சரமாரி வெட்டு; பயணியர் அலறல்; ஸ்ரீவைகுண்டத்தில் பயங்கரம்
ADDED : மார் 11, 2025 12:47 AM

துாத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் அருகே, பஸ்சில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பிளஸ் 1 மாணவரை, வெளியே இழுத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இரு சிறார்கள் உட்பட மூவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த தங்ககணேஷ் மகன் தேவேந்திரன், 17; பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவர், நெல்லை தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
தேவேந்திரன் நேற்று ஆங்கில தேர்வு எழுதுவதற்காக, அரியநாயகிபுரத்தில் இருந்து தனியார் பஸ்சில் ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தார். கெட்டியம்மாள்புரம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, மூன்று பேர் கும்பல், பஸ்சை வழிமறித்து ஏறியது.
பஸ்சில் இருந்த தேவேந்திரனை கீழே இழுத்து வந்த அந்த கும்பல், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி, அங்கிருந்து தப்பியோடியது. இதைப்பார்த்த சக பயணியர் அலறி ஓட்டம் பிடித்தனர்.
தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், வெட்டுக்காயங்களுடன் கிடந்த தேவேந்திரனை மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் நேரில் விசாரித்தார்.
அரியநாயகிபுரம் மற்றும் கெட்டியம்மாள்புரம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், 19, மற்றும் இரு சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறியதாவது:
கைதான லட்சு மணனின் தங்கையிடம், காதலிப்பதாக தேவேந்திரன் கூறியுள்ளார்.
இந்த விஷயம் லட்சுமணனுக்கு தெரிய வரவே, தன் உறவினர்களான இரு சிறுவர்களை அழைத்துச் சென்று, இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த இந்த தகவல்களின் அடிப்படையில், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.