/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பிளாஸ்டிக் குழாயுடன் வந்த பா.ஜ., கவுன்சிலர்
/
பிளாஸ்டிக் குழாயுடன் வந்த பா.ஜ., கவுன்சிலர்
ADDED : ஜூலை 31, 2024 10:04 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி கூட்டம், தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பங்கேற்ற பா.ஜ., கவுன்சிலர் விஜயகுமார் கையில் பிளாஸ்டிக் குழாயுடன் கூட்ட அரங்குக்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.
பிளாஸ்டிக் குழாயுடன் கூட்டத்துக்கு வர அனுமதி கிடையாது என நகராட்சி தலைவர் கருணாநிதி எச்சரித்தார். பின்னர், குழாயை வெளியே வைத்து விட்டு அரங்குக்கு வந்த விஜயகுமார் பேசுகையில், ''என் வார்டு பகுதியில் குடிநீர் பைப் லைன் சீரமைக்கப்படவில்லை. அதற்காகவே பிளாஸ்டிக் குழாயை கொண்டு வந்து நினைவுப்படுத்தினேன்,'' என்றார்.
தொடர்ந்து, நகராட்சி தலைவர் கருணாநிதி பேசியதாவது:
நகராட்சியின், 36 வார்டுகளிலும் குடிநீர் இணைப்பு பணி நடந்து வருகிறது. அடுத்த கூட்டத்துக்குள் உங்கள் வார்டில் பணி முடிக்கப்படும். கோவில்பட்டி நகர் பகுதியில் டிஜிட்டல் போர்டு வைக்க நகராட்சி அனுமதி கட்டாயமாக பெற வேண்டும். அனுமதி பெற்று அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மூன்று நாட்களுக்கு மட்டுமே டிஜிட்டல் பேனர்கள் வைக்க வேண்டும், இதனை அனைத்து அரசியல் கட்சியினர், அனைத்து தரப்பினர் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.