/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
/
குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
ADDED : மே 18, 2024 01:30 AM
தென்காசி:மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் குற்றால அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றால அருவியில் வெள்ள நீர் இழுத்துச் சென்றதில் 16 வயது சிறுவன் அஸ்வின் பலியானார்.
தென் தமிழக கடற்கரையோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் 40 முதல் 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும் எனவும் திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் மே 21 வரை பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது.தென்காசி மாவட்டம் குற்றாலம் வனப் பகுதிகளில் நேற்று மதியம் 12:00 மணி முதல் பலத்த மழை பெய்தது. ஆனால் தென்காசி, குற்றாலம் ஊருக்குள் மழை இல்லை. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்தனர்.
திடீர் வெள்ளம்
பழைய குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை திடீர் வெள்ளமாக மதியம் 2:00 மணியளவில் அருவியில் கொட்டியது. அருவியின் மேல்புறம் பெண்களும் கீழ்புறம் ஆண்களும் குளித்துக் கொண்டிருந்தனர். தடதடவென செம்மண் நிறத்தில் கொட்டிய வெள்ள நீர் ஆண்கள் பகுதியில் குளித்தவர்களை அடித்துச் சென்றது.
பெண்கள் பகுதியில் நின்றவர்கள் மேல் புறமாக தப்பித்து படிகளில் ஏறினர். ஆண்கள் பகுதியில் குளித்த 20க்கும் மேற்பட்டவர்கள் கம்பி தடுப்புகளில் சிக்கினர். அங்கு குளித்த சக பயணிகள் ஒவ்வொருவராக மீட்டனர். இதில் அதிக நீர் வரத்து காரணமாக சிறுவன் அஸ்வின் 16, நீரில் அடித்து பள்ளத்தில் தள்ளப்பட்டார்.
அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பயணிகள் அலறியடித்தபடி வெளியேறினர். அருவிக்குச் செல்லும் படிகள் பகுதியாகவும் வெள்ள நீர் வெளியேறியது. தீயணைப்பு படையினர் மற்றும் ஆயிரப்பேரி கிராமத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் கலெக்டர் கமல் கிஷோர், எஸ்.பி.சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு பழைய குற்றால அருவியில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இரட்டை கால்வாய் எனும் இடத்தில் அஸ்வின் உடல் மீட்கப்பட்டது.
குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட மற்ற அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தடை விதித்திருக்கலாம்
தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் அருவிகளில் குளிக்க தடை விதித்திருக்கலாம். பழைய குற்றாலம் பகுதியில் இரண்டு போலீசார் பணியில் இருந்தனர்
அருவியில் குறைவான தண்ணீர் விழுந்ததால் பயணிகள் குளிக்க அனுமதித்தனர். இரண்டு நாட்களாக குளிக்க அனுமதி மறுத்து எச்சரிக்கப்பட்டு இருந்ததாகவும் அதையும் மீறி பயணிகள் சென்றதாகவும் கலெக்டர் கமல்கிஷோர் தெரிவித்தார். மே 21 வரை பலத்த மழை எச்சரிக்கை இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோயில் பகுதிகளுக்கும் களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதிக்கும் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மணிமுத்தாறில் 52 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 17 மி.மீ. பாபநாசத்தில் 15 மி.மீ., நாங்குநேரியில் 3 மி.மீ., மழை பதிவானது.

