ADDED : ஆக 20, 2024 04:51 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டத்தில், டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் யூனியன் பகுதியில் அதிக மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்தனர்.
அவர்களுக்கு அரசு பல நிவாரண பணிகளை மேற்கொண்டது. ஸ்ரீவைகுண்டம் யூனியனில் பொது நிதியில் இருந்து, 1.55 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், 2ம் தேதி நடந்த யூனியன் கூட்டத்தில், 1.27 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனால், அப்போதைய யூனியன் பி.டி.ஓ., சிவராஜன் தலைமையிலான அதிகாரிகள், 30 லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டதாக கூறி, யூனியன் தலைவர் வசந்தா, துணைத் தலைவர் விஜயன் மற்றும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை செய்யாமலும், சாலைகளை சீரமைக்காமலும் அதிகாரிகள் முறைகேடில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. பாதிப்பின் போது பணத்தைப் பெற்றுக் கொண்டு, முறைகேடாக வீடுகளும் ஒதுக்கி உள்ளனர்.
முறைகேடில் ஈடுபட்ட பி.டி.ஓ., சிவராஜன் தற்போது ஆழ்வார்திருநகரி யூனியனில் பணியாற்றி வருகிறார். அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

