/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வெளிநாட்டுக்கு குறைந்த கட்டணத்தில் பொருட்கள் அனுப்புவதாக மோசடி
/
வெளிநாட்டுக்கு குறைந்த கட்டணத்தில் பொருட்கள் அனுப்புவதாக மோசடி
வெளிநாட்டுக்கு குறைந்த கட்டணத்தில் பொருட்கள் அனுப்புவதாக மோசடி
வெளிநாட்டுக்கு குறைந்த கட்டணத்தில் பொருட்கள் அனுப்புவதாக மோசடி
ADDED : ஜூலை 09, 2024 08:22 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 49, என்பவர் மேனேஜராக வேலைபார்த்து வருகிறார். உணவு பொருட்களை கன்டெய்னர்கள் மூலம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வரும் ஏஜன்டாக அந்த நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிலையில், கோயம்புத்துார் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சர்தார் மனைவி பாசுரோஸ்னரா, 55, அவரது மகன்கள் ரபிக் சர்தார், 38, ரகீல், 26, ஆகியோர் மணிகண்டனை தொடர்பு கொண்டு, குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதாக கூறினர்.
இதையடுத்து, ரஷ்யாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வெள்ளரிக்காய் ஏற்றுமதி செய்வதற்கு, 16 கண்டெய்னர்களை மணிகண்டன் புக்கிங் செய்தார். கட்டணமாக 38 லட்சத்து 49,000 ரூபாய் வங்கிக் கணக்கின் மூலம் அவர் செலுத்தினார்.
ஆனால், ஆறு கண்டெய்னர்களுக்கு மட்டுமே ரசீதை அனுப்பி விட்டு, மீதமுள்ள 10 கண்டெய்னருக்கு மணிகண்டனிடம் வாங்கிய பணத்தை சரியான முறையில் டெலிவரி ஏஜன்டிடம் கட்டாமல் இருந்துள்ளனர். அந்த 10 கண்டெய்னர்களும் டெலிவரி ஆகாமல் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்தில் இருந்துள்ளது.
அதற்கு, அபராதம் விதிக்கப்பட்டதால் 75 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது. அவர்களிடம் மணிகண்டன் பணத்தை திருப்பி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மணிகண்டன் துாத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், ரபீக் சர்தாரை கோயம்புத்துாரில் நேற்று முன் தினம் கைது செய்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.