/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கருணாநிதியின் கனவு திட்டத்தில் வேகம் இல்லை: அரசு மீது தென் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி
/
கருணாநிதியின் கனவு திட்டத்தில் வேகம் இல்லை: அரசு மீது தென் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி
கருணாநிதியின் கனவு திட்டத்தில் வேகம் இல்லை: அரசு மீது தென் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி
கருணாநிதியின் கனவு திட்டத்தில் வேகம் இல்லை: அரசு மீது தென் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஆக 27, 2024 01:27 AM

துாத்துக்குடி: பருவமழை காலத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளில் தண்ணீரை சேமித்து வைத்தாலும், அதன் துணை ஆறுகளில் இருந்து தாமிரபணி ஆற்றில் வெளியேறும் 13.8. டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது.
அந்த தண்ணீரை வறட்சி பகுதியான சாத்தான்குளம், திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை 2009ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி துவங்கி வைத்தார். இதை, 'எனது கனவுத் திட்டம்' என நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் என்ற பெயரில் நான்கு கட்டங்களாக பணிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
கவலை
இதில், பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய ஆறுகளும் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில் 56,933 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
கன்னடியன் கால்வாயை அகலப்படுத்தி, கல்லிடைக்குறிச்சி அருகே கன்னடியன் கால்வாய் 3வது அணையில் இருந்து துாத்துக்குடி மாவட்டம், எம்.எல்., தேரி வரை 73.கி.மீ.,க்கு வெள்ளநீர் கால்வாய் வெட்டப்படுகிறது. 2012ல் பணிகள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்கு இதுவரை 631 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. 80 சதவீத பணிகள் 2021ல் முடிவடைந்தன. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அப்பணிகள் விரைந்து முடிந்து திட்டம் நிறைவுபெறும் என, விவசாயிகள் காத்திருந்த நிலையில், மூன்று ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தனிநபர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததே தாமதத்துக்கு காரணம் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருப்பினும், கால்வாய் தோண்டும் பணிகள் தற்போது மந்தமாக நடந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதே நிலை நீடித்தால், பருவமழை துவங்குவதற்கு முன் பணிகள் நிறைவடைய வாய்ப்பில்லை என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, சாஸ்தாவிநல்லுார் விவசாயிகள் நலச் சங்க செயலர் லுார்து மணி கூறியதாவது:
கடந்த 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்கும்போது வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. 123 ஏக்கர் பரப்பளவு கொண்ட சாலைப்புதுார் குளத்துக்கு, தண்ணீர் வருவதற்கான பகுதி மட்டுமே பாக்கி உள்ளது.
தற்போது பணியை துவங்கினாலும் ஒரு மாதத்துக்குள் முடித்து விடலாம். போர்க்கால அடிப்படையில் அப்பணியை துவங்க வேண்டும் என, மக்கள் பிரதிநிதிகளிடமும், கலெக்டர்களிடமும் வலியுறுத்தி உள்ளோம்.
அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்தபோது பணிகள் வேகமாக நடந்தது. ஆனால், தற்போது அந்த வேகம் இல்லாமல் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
வேண்டுகோள்
சாலைப்புதுார் குளம் தான், வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் கடைசிப் பகுதி.
இப்பகுதியில் கால்வாய் தோண்டிவிட்டால் திட்டம் முழுமையடைந்துவிடும். தி.மு.க., அரசு கூடுதல் கவனம் செலுத்தி, இத்திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும். இல்லையென்றால், மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்த போது, கனவுத் திட்டம் என கூறி துவங்கிய வெள்ளநீர் கால்வாய்த் திட்டம், 15 ஆண்டுகளாகியும் நிறைவு பெறாத நிலை இருந்து வருகிறது.
அவரது நுாற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், தி.மு.க., அரசு விரைந்து செயல்பட்டு அப்பணிகளை முடிக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.