/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
டூ - வீலர் மீது லாரி மோதல்; கல்லுாரி மாணவர் பலி
/
டூ - வீலர் மீது லாரி மோதல்; கல்லுாரி மாணவர் பலி
ADDED : செப் 04, 2024 01:42 AM
துாத்துக்குடி : திருநெல்வேலி பாளையங்கோட்டை செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த டேனியல் மகன் ஜான் டேவிட், 21.
இவர், தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் உள்ள ஒரு கல்லுாரியில் பி.காம்., மூன்றாமாண்டு படித்து வந்தார். அதே வகுப்பில், செங்கோட்டை ராணாகுடியிருப்பை சேர்ந்த காசிவிஸ்வநாதன் மகள் சுமதி, 20, என்பவரும் படித்து வந்தார்.
இருவரும் துாத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தனர்.
அதற்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்று விட்டு, டூ - வீலரில் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பி கொண்டிருந்தனர். வாகைக்குளம் அருகே நெடுஞ்சாலை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டிருந்தது.
அப்போது, திருநெல்வேலியில் இருந்து துாத்துக்குடி நோக்கி வந்த லாரி, எதிர்பாராத விதமாக டூ - வீலர் மீது மோதியது.
இதில், ஜான் டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கால் மற்றும் கை முறிவு ஏற்பட்ட நிலையில், சுமதி துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்த புதுக்கோட்டை போலீசார், திருச்சி துறையூரை சேர்ந்த லாரி டிரைவர் ஜெனித்குமார், 25, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.