/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சிகரெட் லைட்டர் விற்க தடை கோரி மனு
/
சிகரெட் லைட்டர் விற்க தடை கோரி மனு
ADDED : ஏப் 30, 2024 10:40 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், தமிழக சமூக நலன், மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவரிடம், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அளித்த மனு விபரம்:
துாத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி உட்பட தென் மாவட்டங்களை சேர்ந்த, லட்சக்கணக்கான மக்கள் தீப்பெட்டி தொழிலை நம்பி வாழ்கின்றனர்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளில், 90 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டி தருகிறது.
இந்நிலையில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்களால், தீப்பெட்டி விற்பனை முற்றிலுமாக முடங்கி போகும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனால், தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது. 20 ரூபாய்க்கு குறைவான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது.
இருப்பினும், சீனாவில் இருந்து சிகரெட் லைட்டர்கள் கடத்தி வரப்பட்டு, விற்பனை நடக்கிறது. எனவே, தமிழகத்தில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் விற்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இது தொடர்பாக, தொழில்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என, தீப்பெட்டி உற்பத்தியாளர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தார்.