/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பெண்ணை ஏமாற்றிய மனு எழுதுபவர் கைது
/
பெண்ணை ஏமாற்றிய மனு எழுதுபவர் கைது
ADDED : ஜூலை 09, 2024 09:26 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சிறுத்தொண்டநல்லுாரைச் சேர்ந்த மகாராஜா மனைவி முத்துமாரி, 41. ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்காக ஏரல் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தாலுகா அலுவலக வளாகத்தில் மனு எழுதிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மாங்கொட்டாப்புரத்தை சேர்ந்த சண்முகராஜா, 54 என்பவர் முத்துமாரியை அணுகியுள்ளார். தாசில்தார் கோபால் தனக்கு தெரிந்தவர் தான் என கூறியுள்ளார்.
மேலும், ஆதரவற்ற விதவை சான்றிதழை பெற்று தர முத்துமாரியிடம் இருந்து 5,500 ரூபாய் பெற்ற அவர், மூன்று மாதங்கள் ஆகியும் எதுவும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். தாசில்தார் கோபால் மற்றும் ஏரல் காவல் நிலையத்தில் முத்துமாரி புகார் தெரிவித்தார்.
உடனே தாசில்தார் கோபால், சண்முகராஜா பொதுமக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு தனக்கும், அரசுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாக, போலீசாரிடம் புகார் அளித்தார்.
ஏரல் போலீசார் சண்முகராஜாவை நேற்று கைது செய்தனர்.