ADDED : ஆக 29, 2024 02:51 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகேயுள்ள சிந்தலக்கரை கிராமத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 2021ம் ஆண்டு சாலை அமைக்க, 32.11 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. சிந்தலக்கரை கிராமத்தில் இருந்து துரைச்சாமிபுரம் வரை ஓரடுக்கு கற்சாலை அமைக்கும் பணிகள் நடந்தன.
இந்நிலையில், அடிப்படை திட்டமிடல் இல்லாமல் நீரோடையை மறித்து, கண்மாய்க்கு உள்ளேயே சாலை அமைத்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
சாலை அமைக்கப்பட்ட பகுதி மக்களிடம் அனுமதி பெறாமல், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் வழியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. நீரோடைப் பாதையில் கண் குழாய்கள் அமைத்து நீரோடையை மறித்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மழை மற்றும் வெள்ள நீர் நிலங்களில் தேங்கி விவசாயம் பாதிக்கப்படும்.
பஞ்., தலைவர் தன் சொந்த விவசாய நிலத்திற்கு செல்வதற்காக 32 லட்சம் ரூபாயில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின், 32.11 லட்சம் ரூபாய் அதிகாரிகளால் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.