/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
90 சதவீத ஆக்கிரமிப்பில் உப்பாற்று ஓடை: மீண்டும் வெள்ளம் வந்தால் 'முத்துநகர்' மூழ்கும் அபாயம்
/
90 சதவீத ஆக்கிரமிப்பில் உப்பாற்று ஓடை: மீண்டும் வெள்ளம் வந்தால் 'முத்துநகர்' மூழ்கும் அபாயம்
90 சதவீத ஆக்கிரமிப்பில் உப்பாற்று ஓடை: மீண்டும் வெள்ளம் வந்தால் 'முத்துநகர்' மூழ்கும் அபாயம்
90 சதவீத ஆக்கிரமிப்பில் உப்பாற்று ஓடை: மீண்டும் வெள்ளம் வந்தால் 'முத்துநகர்' மூழ்கும் அபாயம்
ADDED : செப் 09, 2024 12:53 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்ட மக்கள் 2015 மற்றும் 2023ல் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. கடந்த ஆண்டு டிச., 17, 18ம் தேதிகளில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், நகரில் பெரும்பாலான பகுதிகள் மூழ்கின.
வரலாறு காணாத மழை, காட்டாற்று வெள்ளம் என, அதிகாரிகள் பல காரணங்களை கூறினாலும் வெள்ளப்பாதிப்புக்கு முக்கிய காரணம், துாத்துக்குடியின் வடிகாலான உப்பாற்று ஓடை ஆக்கிரமிக்கப்பட்டதே பிரதான காரணம்.
பெரும் சேதம்
கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வரும் பகுதியிலும், குளத்தில் இருந்து, 24 கண் மதகில் தண்ணீர் வெளியேறும் பகுதியிலும் பெரும்பாலான இடங்கள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுஉள்ளன.
கோரம்பள்ளம் குளத்தில் இருந்து கடலில் கலக்கும் பகுதி வரை கடந்த மழையின்போது, 22 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய பகுதிகளிலும் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
மொத்தம், 12 கி.மீ., துாரம் கொண்ட உப்பாற்று ஓடையில் உடைப்புகளை அடைக்க, 5.91 கோடி ரூபாயும், மதகுகளை உயர்த்தி தடுப்புச் சுவர் அமைக்க, 12.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்து பணிகள் நடக்கின்றன.
பருவமழை காலத்துக்கு முன் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.
அக்டோபரில் பருவமழை துவங்க உள்ள நிலையில், உப்பாற்று ஓடையில் பணிகள் முழுமை பெறாமல் இருப்பது மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் என, அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
பொதுப்பணித்துறை ஆவணங்களில் கோரம்பள்ளம் குளத்தின், 24 கண் மதகு பகுதியில், 160 மீட்டர் அகலமும், உப்பாற்று ஓடையில் முதல் 6 கி.மீ.,க்கு 160 மீட்டர் அகலமும் கொண்டது என, உள்ளது. திருச்செந்துார் சாலையை தாண்டியதும் உப்பாற்று ஓடை 328 மீட்டர் வரை விரிவடையும் என, ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், 6 கி.மீ., தொலைவுக்கு உப்பாற்று ஓடையில், 328 மீட்டர் அகலத்திற்கு பதிலாக 28 மீட்டர் மட்டுமே அகலம் உள்ளது. தெற்கு பகுதியில் உப்பளங்களும், வடக்கு பகுதியில் தொழிற்சாலைகளும் உப்பாற்று ஓடையை ஆக்கிரமித்துள்ளன.
விசாரணை
இதில், சிலர் வருவாய் துறை வாயிலாக அவர்கள் பெயரில் பட்டா வைத்திருப்பது வேடிக்கை. ஆக்கிரமிப்பாளர்களிடம் நிதி பெற்று உப்பாற்று ஓடையை துார்வாரும் செயல் இன்னும் வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு கூறினர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பழைய வருவாய் பதிவேடுகளின்படி, உப்பாற்று ஓடையின் கீழ் பகுதி 328 மீட்டர் அகலம் உள்ளது.
தற்போது உப்பளங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் ஆக்கிரமிப்பால் ஓடையின் அகலம் கணிசமாக குறைந்துள்ளது. ஓடை கரையோரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதால், விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
நீர்நிலையின் வால் முனை சுருங்கினால், தண்ணீர் வேகமாக செல்லாமல் நிரம்பி வழிவதோடு மேலோட்டத்தில் உடைப்புகளை ஏற்படுத்தும். ஓடை ஆக்கிரமிப்பு குறித்து வருவாய் துறை அதிகாரிகள் தான் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
மாவட்ட நிர்வாகம், மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.