/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்தூர் கோயிலில் சுவாமி பச்சை சாத்தி வீதி உலா
/
திருச்செந்தூர் கோயிலில் சுவாமி பச்சை சாத்தி வீதி உலா
திருச்செந்தூர் கோயிலில் சுவாமி பச்சை சாத்தி வீதி உலா
திருச்செந்தூர் கோயிலில் சுவாமி பச்சை சாத்தி வீதி உலா
ADDED : செப் 01, 2024 01:43 AM
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் 8ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்தார். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடக்கிறது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா ஆக.,24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் நாளான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெள்ளை மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து சிவன் கோயில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி பரியேறும் பெருமாள் வகையறா மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பச்சை சாத்தி கட்டளைதாரர் மீனாட்சி சுந்தரம், மல்லிகா, ராமசுப்பிரமணியம் சார்பில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம், அலங்காரமாகி மகாதீபாராதனை நடந்தது. பகல் 11:30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டு அணிந்து, மரிக்கொழுந்து மாலை அணிந்து விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கண் சாத்தி வழிப்பட்டனர்.
மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், சுவாமி அலைவாயுகந்தபெருமான் தனித்தனி குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருநெல்வேலி ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி மீண்டும் சிவன் கோயில் சேர்ந்தனர்.
விழாவின் 9ம் நாளான இன்று இரவு 9:00 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், வள்ளி அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.
தேரோட்டம்
ஆவணித் திருவிழாவின் 10ம் நாளான நாளை (செப்.,2) காலை 6:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும், மூன்றாவதாக வள்ளியம்மன் எழுந்தருளிய தேரும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.