/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆசிரியர்களின் போராட்டத்தால் பள்ளிக்கு பூட்டு 2 மணி நேரம் காத்திருந்த மாணவர்கள்
/
ஆசிரியர்களின் போராட்டத்தால் பள்ளிக்கு பூட்டு 2 மணி நேரம் காத்திருந்த மாணவர்கள்
ஆசிரியர்களின் போராட்டத்தால் பள்ளிக்கு பூட்டு 2 மணி நேரம் காத்திருந்த மாணவர்கள்
ஆசிரியர்களின் போராட்டத்தால் பள்ளிக்கு பூட்டு 2 மணி நேரம் காத்திருந்த மாணவர்கள்
ADDED : செப் 10, 2024 11:42 PM

துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,250 பள்ளிகளில், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் நேற்று பணிக்கு வரவில்லை.
இதனால், அங்கு மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் சக மாணவ - மாணவியருக்கு பாடம் எடுத்து அசத்தினார்.
'எண்ணும் எழுத்தும்' என்ற தலைப்பில் முந்தைய நாள் ஆசிரியை கரும்பலகையில் எழுதி வைத்திருந்த பாடத்தின் விளக்கத்தை அவர் சக மாணவ, மாணவியருக்கு விளக்கினார்.
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் திடீர் ஆசிரியராக மாறி வகுப்பில் பாடம் எடுத்தது, சிறப்பாக பேசப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பூவத்துாரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், 127 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
அரசு சார்பில் நான்கு ஆசிரியர்களும், பெற்றோர் , ஆசிரியர் கழகம் சார்பில் இரு ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், நேற்று 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் உள்ள, ஆசிரியர்கள் - டிட்டோஜாக் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், பூவத்துாரில் காலை வழக்கம் போல மாணவர்களும், தற்காலிக ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்தனர்.
வகுப்பறை திறந்து இருந்த நிலையில், மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து இருந்தனர். அப்போது, அங்கு வந்த பள்ளி நிர்வாகி ஒருவர், மாணவர்களை வெளியேற்றி விட்டு வகுப்பறையை பூட்டி விட்டு சென்றதால், மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில் அமர்ந்து இருந்தனர்.
இதை கண்ட பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருக்கு தகவல் அனுப்பினர்.
இதையடுத்து அங்கு வந்த அவர்கள், மாணவர்களிடம் விபரம் கேட்டறிந்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
கல்வித்துறை அதிகாரிகளின் ஏற்பாட்டின்படி பள்ளி வகுப்பறையின் பூட்டுகள் உடன் திறக்கப்பட்டு, இரண்டு மணி நேரமாக வெளியில் காத்திருந்த மாணவர்களை, வகுப்பறைக்கு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வகுப்புகளை துவங்கினர். இதுபோல மாநிலம் முழுதும் பல இடங்களில் பள்ளி ஆசிரியர் போராட்டம் நடத்தினர்.