/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நீட் தேர்வு மையத்தில் இருவகையான வினாத்தாள்
/
நீட் தேர்வு மையத்தில் இருவகையான வினாத்தாள்
ADDED : மே 06, 2024 11:42 PM

துாத்துக்குடி : நாடு முழுதும் மே 5ல் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. துாத்துக்குடி மாவட்டத்தில் இந்த தேர்வு மூன்று மையங்களில் நடந்தது.
துாத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியில், 768 மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதினர். இதில், 200-க்கும் மேற்பட்டோருக்கு வினாத்தாள் வித்தியாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
தேர்வு எழுதி முடித்ததும் வெளியே வந்த மாணவ, மாணவியர் பலர் தங்களுக்குள் இந்த தகவலை பகிர்ந்து கொண்டனர். இதுதொடர்பாக, மாணவ, மாணவியர், பெற்றோர் துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள நீட் தேர்வு மையங்களில் கியூ, ஆர், எஸ், டி, என்ற எழுத்துக்களுடன் கூடிய வினாத்தாள் வழங்கப்பட்டது.
அழகர் பப்ளிக் பள்ளி மையத்தில் சிலருக்கு அந்த எழுத்துக்களுடனும், சிலருக்கு எம், என், ஓ, பி, என்ற எழுத்துக்களுடன் கூடிய வினாத்தாள் வழங்கப்பட்டது. அது வேறு மாநிலத்துக்கு அனுப்பப்பட்ட வினாத்தாளாக இருக்கலாம்.
இதுவரை நடந்த நீட் தேர்வுகளில் ஒரே மாதிரி வினாக்கள் அடங்கிய நான்கு வகையான வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, வினாக்களே வேறாக இருந்தன.
மேலும், கியூ, ஆர், எஸ், டி, எழுத்துக்களுடன் கூடிய வினாத்தாளை விட, எம், என், ஓ, பி, எழுத்துக்களுடன் கூடிய வினாத்தாளில் இடம்பெற்ற வினாக்கள் கடினமாக இருந்தன. இதனால், கட் - ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, தேசிய தேர்வு முகமை உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.