/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பெரிய கப்பல்களை வரவேற்க அக்டோபரில் பணி துவக்கம்
/
பெரிய கப்பல்களை வரவேற்க அக்டோபரில் பணி துவக்கம்
UPDATED : ஆக 06, 2024 03:38 PM
ADDED : ஆக 06, 2024 01:01 AM
துாத்துக்குடி,:நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் ஒன்றாக திகழும், துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், இந்த நிதியாண்டில், 50 மில்லியன் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13.17 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்த்குமார் புரோஹித் வெளியிட்டுள்ள அறிக்கை:
துாத்துக்குடி துறைமுகத்தில் பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. 306 மீட்டர் நீளமும், 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட பெரிய கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக, மூன்றாவது வடக்கு சரக்கு தளத்தை ஆழப்படுத்தும் பணி, அக்டோபரில் துவங்கப்படுகிறது.
துறைமுகத்திற்கு கப்பல் வந்து செல்லும் நுழைவு வாயிலை ஆழப்படுத்தும் பணி மற்றும் கப்பல் திரும்பும் சுற்றுப்பாதையை ஆழப்படுத்தும் பணியும் நடைபெற உள்ளன.
அப்பணிகள் நிறைவடைந்தால் 100 முதல், 120 டன் திறன் கொண்ட, நகரும் பளு துாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி, 2 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும்.
வருங்காலத்தில் துறைமுகத்தில் கூடுதலாக, 2 மில்லியன் டன் பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக நங்கூரமிடப்பட்டுள்ள சரக்கு கப்பல்களில் இருந்து சரக்குகளை கையாளுவதற்கு, மிதவை இயந்திரங்கள் மற்றும் மூன்று சுமை படகுகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் 120 மீட்டர் நீளமும், 52-55 மீட்டர் அகலமும் கொண்ட சிறிய வகை கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக, கப்பல் பாதுகாப்பிற்கான நங்கூர பிணைப்பிடம் அமைக்கும் பணி, 2025ல் முடிக்கப்படும்.
துறைமுகத்தில் இரண்டாவது வடக்கு சரக்கு தளத்தில் கூடுதலாக, ஒரு நாளைக்கு 25,000 டன் சரக்குகளை கையாளக் கூடிய, 100 டன் திறன் கொண்ட நகரும் பளுதுாக்கி இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன.
காற்றாலை இறகுகளை தடையில்லாமல் கையாளுவதற்கு வசதியாக, இரண்டு இயந்திரங்கள் அடுத்த மாதம் நிறுவப்பட உள்ளன. இந்த வளர்ச்சி திட்டப்பணிகள் மூலம், இந்த நிதியாண்டு முடிவில், துறைமுகம் 50 மில்லியன் டன்னுக்கு மேல் சரக்குகளை கையாள முடியும்.
மேலும், சர்வதேச சரக்கு போக்குவரத்து வர்த்தகத்திற்கு தடையற்ற சரக்கு கையாளுதல் மற்றும் சரக்குக் கையாளும் செயல்பாடுகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க துறைமுகம் அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.