/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
போலீசை கண்டதும் மிரண்ட மாடு திருடர்கள் செய்த வேலை!
/
போலீசை கண்டதும் மிரண்ட மாடு திருடர்கள் செய்த வேலை!
போலீசை கண்டதும் மிரண்ட மாடு திருடர்கள் செய்த வேலை!
போலீசை கண்டதும் மிரண்ட மாடு திருடர்கள் செய்த வேலை!
ADDED : மே 03, 2024 02:11 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார்குடியிருப்பைச் சேர்ந்தவர் பட்டுராஜ். இவருக்கு சொந்தமான தோட்டம் புதுக்குளம் சந்திப்பு பகுதியில் உள்ளது.
அந்த தோட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். அவர் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளில் இரண்டு மாடுகளை சிலர் திருடிச் சென்றனர்.
மாடுகளை காணாத அவர், பல இடங்களில் தேடினார். இதுகுறித்து, அவர், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில், பட்டுராஜ் நேற்று காலை வழக்கம்போல தோட்டத்திற்கு சென்றார். தோட்டத்தின் வாசலில் இருந்த வேலியில் ஒரு அட்டை தொங்கவிடப்பட்டு இருந்தது. அந்த அட்டையில், 'உங்களது மாடு சங்கரன்குடியிருப்பு கெபி அருகே உள்ள புளியமரத்துக்கு அடியில் கட்டப்பட்டுள்ளது' என எழுதப்பட்டிருந்தது.
உடனே, அந்த இடத்திற்கு சென்ற பட்டுராஜ், தன் இரண்டு மாடுகளும் அங்கு கட்டப்பட்டிருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். இரண்டு மாடுகளையும் அவிழ்த்து தோட்டத்திற்கு ஓட்டி வந்தார்.
திருடப்பட்ட மாடுகளை பட்டுராஜ் தீவிரமாக தேடி வருவதை அறிந்த திருடர்கள், போலீசுக்கு பயந்து, மாடு இருக்கும் இடத்தின் விபரத்தை ஒரு அட்டையில் எழுதி, அந்த அட்டையை தோட்டத்து வேலியில் தொங்கவிட்டதை அறிந்தவர்கள், மாடு கிடைத்ததே என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த சுவாரசிய நிகழ்ச்சி, அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.