/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பயிற்சிக்கு பணமின்றி பார்வையற்ற கிரிக்கெட் வீரர் தவிப்பு கரிசனம் காட்டுவாரா முதல்வர்?
/
பயிற்சிக்கு பணமின்றி பார்வையற்ற கிரிக்கெட் வீரர் தவிப்பு கரிசனம் காட்டுவாரா முதல்வர்?
பயிற்சிக்கு பணமின்றி பார்வையற்ற கிரிக்கெட் வீரர் தவிப்பு கரிசனம் காட்டுவாரா முதல்வர்?
பயிற்சிக்கு பணமின்றி பார்வையற்ற கிரிக்கெட் வீரர் தவிப்பு கரிசனம் காட்டுவாரா முதல்வர்?
UPDATED : ஜூலை 16, 2024 02:04 AM
ADDED : ஜூலை 16, 2024 01:46 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கே.துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் மகாராஜா, 26. பிறவியில் இருந்தே பார்வை குறைபாடு கொண்ட இவருக்கு 8வது வயதில் முழுமையாக பார்வை பறிபோனது.
பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் படிப்பை முடித்த இவர், மதுரை தனியார் கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் படித்துள்ளார்.
வெள்ளி பதக்கம்
கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட மகாராஜா, 2012ல் திருநெல்வேலி மாவட்ட அணியிலும், 2017ல் தமிழக அணியிலும் இடம் பெற்றார். தொடர்ந்து, திறமையை வெளிப்படுத்திய அவருக்கு, இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் கடந்த ஆண்டு இடம் கிடைத்தது.
இங்கிலாந்தில் ஆகஸ்டில் நடந்த பார்வையற்றோருக்கான போட்டியில், இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது. அந்த அணியில் தமிழகத்தில் இருந்து இடம் பெற்றவர் மகாராஜா மட்டுமே.
மற்ற மாநில வீரர்களை மாநில அரசுகள் கவுரவப்படுத்திய நிலையில், தமிழக அரசு பாராமுகத்துடன் இருந்து விட்டது.
சர்வதேச அளவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மகாராஜாவை இதுவரை முதல்வர், விளையாட்டு துறை அமைச்சர் என, யாரும் சந்தித்து பாராட்டு கூட தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவில் ஆக., 25ம் தேதி துவங்கும் இரண்டு மாத பயிற்சிக்காக மகாராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அமெரிக்கா செல்ல தேவையான நிதியின்றி தவித்து வருகிறார்.
இது தொடர்பாக, துாத்துக்குடி கலெக்டரை சந்தித்து மகாராஜா மனு அளித்தார். உடனே, கலெக்டர் லட்சுமிபதி தன் விருப்ப நிதியில், மகாராஜாவுக்கு கிரிக்கெட் கிட் மட்டும் வழங்கி பாராட்டினார்.
மகாராஜா கூறியதாவது:
என் தந்தை சிவசுப்பிரமணியன் கொரோனாவில் இறந்துவிட்டார். தாய் சண்முகத்தாய் உதவியோடு வாழ்ந்து வருகிறேன். அவர் கூலி வேலை செய்து என்னை காப்பாற்றி வருகிறார். பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்திய அணியில் இடம் பிடித்தேன்.
பத்ம விருது
இங்கிலாந்தில் நடந்த உலக பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றோம். அணியின் கேப்டன் அஜய்குமார் ரெட்டிக்கு ஜனாதிபதி அர்ஜுனா விருது வழங்கினார்.
முன்னாள் கேப்டன் சேகர் நாயருக்கு பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது. அணியில் இடம் பிடித்த ஒடிசா மாநில வீரர்களுக்கு, 15 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்துள்ளது.
தமிழக அரசு இதுவரை எனக்கு ஊக்கத்தொகை ஏதும் வழங்கவில்லை. அரசாணை வழிகாட்டுதல் படி விண்ணப்பித்துள்ள போதிலும் இதுவரை எந்த பதிலையும் அரசு தெரிவிக்காமல் உள்ளது. பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ள எனக்கு தமிழக அரசு உதவ முன்வர வேண்டும்.
முதல்வர், விளையாட்டு துறை அமைச்சர் கவனத்துக்கு என் கோரிக்கையை கொண்டு சென்றுள்ளேன். கனிமொழி எம்.பி., பார்வைக்கும் தெரிவித்துள்ளேன். நல்ல பதில் வரும் என காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றுத் திறனாளிகளை தன் செல்லப்பிள்ளைகள் என்றே முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறுவார்.
எதிர்பார்ப்பு
அதனால் தான் ஊனமுற்றோர் என்ற வார்த்தைக்கு பதில், மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வேண்டுமென, அவரது ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு, இன்றளவும் பின்பற்றப்படுகிறது.
கருணாநிதியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான மகாராஜாவுக்கு, அமெரிக்கா செல்ல நிதி உதவியும், உரிய அங்கீகாரமும் அளித்து முதல்வர் ஸ்டாலின் கவுரவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.