/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
போதையில் கணவர் தகராறு மகனுடன் பெண் போராட்டம்
/
போதையில் கணவர் தகராறு மகனுடன் பெண் போராட்டம்
ADDED : ஜூன் 02, 2024 02:28 AM

கோவில்பட்டி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த சின்னமருது மனைவி பாலமுருகேஸ்வரி, 39. இவர்களுக்கு 12 வயதில் முகுந்தன் என்ற ஒரு மகன் உள்ளார். சின்னமருது தினமும் மது அருந்தி, மனைவி பால முருகேஸ்வரி, மகன் முகுந்தனை தாக்கி உள்ளார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், சின்னமருதுவை கைது செய்தனர். ஆனால், அவரை காவல் நிலைய ஜாமினில் உடனே விடுவித்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சென்ற சின்னமருது, காவல் நிலையத்தில் தன் மீது எப்படி புகார் கொடுக்கலாம் எனக் கூறி, தடியால் பால முருகேஸ்வரி மற்றும் மகன் முகுந்தனை கடுமையாக தாக்கியுள்ளார். இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சத்தம் போட்டதால் சின்னமருது அங்கிருந்து சென்றுள்ளார்.
தனக்கும், மகனுக்கும் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, பாலமுருகேஸ்வரி மகன் முகுந்தன், தந்தை காளிமுத்து ஆகியோருடன் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார். அதிகாரிகள் பேச்சு நடத்தினர். காவல் துறை வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.