/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
விபத்து நிகழ்ந்த கிணற்றில் 45 சவரன் நகைகள் மீட்பு
/
விபத்து நிகழ்ந்த கிணற்றில் 45 சவரன் நகைகள் மீட்பு
ADDED : மே 18, 2025 10:03 PM

துாத்துக்குடி: கிணற்றுக்குள் கார் கவிழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது நகைகள் 45 சவரன் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கோவை துடியலுாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் திருச்செந்துார் தாலுகா வெள்ளாளன்விளை கிராமத்தில் உள்ள சர்ச் விழாவில் கலந்து கொள்ள ஆம்னி வேனில் சென்றனர். சாத்தான்குளம் தாலுகா மீரான்குளம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த சுற்றுச்சுவர் இல்லாத தரைமட்ட கிணற்றுக்குள் கவிழ்ந்தது.
இதில், காரில் இருந்த மோசஸ், 50, அவரது மனைவி வசந்தா, 44, ரவி கோவில்பிச்சை, 59, அவரது மனைவி ஹெத்சியா கிருபா, 51, மோசஸின் ஒன்றரை வயது பேரன் ஸ்டாலின் ஆகியோர் உயிரிழந்தனர்.
காரில் இருந்து கீழே விழுந்த மோசஸ் மகன் ஹேர்சோம், அவரது மனைவி ஷைனி, இறந்த ரவி கோவில்பிச்சை மகள் ஜெனிட்டா ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். கிணற்றுக்குள் விழுந்த கார் மற்றும் ஐந்து பேரின் உடல்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டன.
அவர்களது நகை மற்றும் முக்கிய உடமைகள் கிணற்றுக்குள் இருப்பதாக கூறப்பட்டது. சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ஹேரீஸ் தாமஸ் தலைமையில் வீரர்கள் நகை வைக்கப்பட்டிருந்த பேக்கை நேற்று மீட்டனர்.
அதில் இருந்த 45 சவரன் நகைகள், உடமைகளை மோசஸ் உறவினர்களிடம் தட்டார்மடம் போலீசார் சரிபார்த்து ஒப்படைத்தனர். கிணற்றுக்குள் தத்தளித்த 3 பேரை மீட்ட விவசாயி பாண்டி என்பவருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.