/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தலைமையாசிரியரிடம் லஞ்சம் சிக்கிய அறநிலைய அதிகாரி
/
தலைமையாசிரியரிடம் லஞ்சம் சிக்கிய அறநிலைய அதிகாரி
ADDED : செப் 20, 2024 02:00 AM
துாத்துக்குடி:ஹிந்து சமய அறநிலையத் துறையில், காஞ்சிபுரம் மண்டல இணை கமிஷனராக பணியாற்றுபவர் குமாரதுரை, 57. இவர், மதுரையில் பணிபுரிந்தபோது, அக்., 2021 முதல், மே 2022 வரை திருச்செந்துார் கோவில் இணை கமிஷனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
அப்போது, அங்குள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளி பொறுப்பும் இவரது கட்டுப்பாட்டில் இருந்தது. அப்பள்ளியில் தலைமையாசிரியராக, 75 சதவீதம் பார்வை திறனற்ற பாலமுருகன் என்பவர் இருந்தார்.
அவருக்கு, 7வது ஊதியக்குழு அடிப்படையில், 10 லட்சம் ரூபாய் சம்பள நிலுவைத் தொகை வந்தது. அத்தொகையை விடுவிக்க குமாரதுரை, 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், முதல் தவணையாக, 50,000 ரூபாயை குமாரதுரையின் தபேதார் சிவானந்தத்திடம் வழங்கியதாகவும் பாலமுருகன் கூறினார்.
இந்த விபரங்களை, துாத்துக்குடி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் பாலமுருகன் புகாராக வழங்கினார்.
இந்நிலையில், குமாரதுரை மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த அனுமதி கேட்டு அறநிலையத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது; அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, குமாரதுரை மீது துாத்துக்குடி லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., பீட்டர்பால்துரை நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.