ADDED : ஏப் 23, 2025 03:11 AM

துாத்துக்குடி:ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார் திருநகரி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த காற்று வீசியது. இதில் வாழைமரங்கள் அடியோடு சாய்ந்தன. ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர், பொன்னங்குறிச்சி, கரையடியூர் பகுதிகளில் ஏராளமான வாழைகள் சாய்ந்தன.
ஆழ்வார் திருநகரி ,ஏரல் பகுதிகளிலும் வாழைகள் சேதமுற்றன. விவசாயத் தொழிலாளர்கள் நேற்று அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுகா அலுவலகத்தில் இருந்து வந்திருந்த வருவாய்த் துறை அதிகாரிகள் சேத மதிப்பை கணக்கிட்டனர்.
2023 டிசம்பர் மழை வெள்ளத்தின் போது இந்த பகுதிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகின. ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது தான் விவசாயிகள் மீண்டும் விவசாயத்தை மேற்கொள்ளும் போது மீண்டும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காற்றால் சேதமடைந்த மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு நேற்று மின்வினியோகம் சீரானது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

