/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடியில் வாரிய தலைவர் ஆய்வு மின்நிலைய அதிகாரிகளுக்கு 'டோஸ்'
/
துாத்துக்குடியில் வாரிய தலைவர் ஆய்வு மின்நிலைய அதிகாரிகளுக்கு 'டோஸ்'
துாத்துக்குடியில் வாரிய தலைவர் ஆய்வு மின்நிலைய அதிகாரிகளுக்கு 'டோஸ்'
துாத்துக்குடியில் வாரிய தலைவர் ஆய்வு மின்நிலைய அதிகாரிகளுக்கு 'டோஸ்'
ADDED : டிச 26, 2024 06:24 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி துறைமுகம் பகுதியில் உள்ள தமிழக அரசின் மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்களில் தினமும் 1,050 மெகா வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அனல் மின் நிலைய பாய்லர்களை குளிர்விக்க கடலில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக 20 அடி அகலத்தில் 25 அடி ஆழம் கொண்ட தனி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி பெய்த கனமழையால் கால்வாய் சுற்றுச்சுவரில் உடைப்பு ஏற்பட்டது.
கால்வாயின், 400 மீட்டர் தொலைவுக்கு சுற்றுச்சுவர் இடிந்து சாம்பல் கழிவுகளுடன் பாய்லர்களுக்குள் தண்ணீர் புகுந்ததால், 1, 2, 3 ஆகிய யூனிட்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
சாம்பல் கழிவுகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், 10 நாட்களுக்கு மேலாகியும் 630 மெகா வாட் மின்சார உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் நேற்று முன்தினம் திடீரென அனல் மின் நிலையத்தில் ஆய்வு நடத்தினார். ஒரு பக்கம் உள்ள சுற்றுச்சுவர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும் நிலையில், புதிதாக கட்டிய சுற்றுச்சுவர் மட்டும் இடிந்தது எப்படி என அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, அதிகாரிகள் திணறினர். கான்ட்ராக்டர் குறித்து அவர் கேள்வி எழுப்பியபோது, அதிகாரிகள் பதில் அளிக்க தயங்கினர்.
ஏற்கனவே பணி செய்தவர்கள், மீண்டும் பணி செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த பதிலை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். சாம்பல் கழிவுகளை விரைந்து அகற்றும் வசதிகள் கொண்ட சென்னையை சேர்ந்த கான்ட்ராக்டருக்கு பணிகளை உடனே வழங்க ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
''ஜன., 5க்குள் அனைத்து கழிவுகளும் அகற்றப்பட்டு மின் உற்பத்தியை துவங்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என அவர் உத்தரவிட்டார்.
அதிகாரிகள் சிலர் கான்ட்ராக்டர்களுடன் கூட்டு சேர்ந்து விதிமுறையை மீறி செயல்பட்டதால் தான் தரம் குறைந்த சுற்றுச்சுவர் கட்டப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், மின்வாரியத் தலைவர் நந்தகுமார் நேரில் ஆய்வு செய்து, பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டு இருப்பதால், விதிமுறை மீறலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டு உள்ளது.

