ADDED : ஏப் 04, 2025 02:30 AM
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பாரதியார் நுாற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவிக்கு, மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் மதன்குமார், 31, பாலியல் தொல்லை அளித்துள்ளார். மாணவி, கல்லுாரி முதல்வரிடம் புகார் அளித்தார். முதல்வர் பேபி லதா தலைமையில், ஒன்பது பேர் குழு மாணவியிடம் விசாரித்தது.
இதற்கிடையே, புகார் அளித்த மாணவியை சிலர் மிரட்டியதாக புகார் எழுந்தது. விளாத்திகுளம் மகளிர் போலீசார் நேற்று முன்தினம் மாணவியிடமும், பேராசிரியர் மதன்குமாரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
மதன்குமார் மீது நேற்று போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்யவில்லை.
சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகக் கூறி போலீசார் கைது நடவடிக்கையை தவிர்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேராசிரியரை கைது செய்ய, ஜனநாயக மாதர் சங்கம், பா.ஜ., உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, மதன்குமார் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாகக் கூறி, பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிலும் 60 மாணவியர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., திபு, விளாத்திகுளம் டி.எஸ்.பி., அசோகன், எட்டையபுரம் தாசில்தார் சுபா ஆகியோர் கல்லுாரியில் முகாமிட்டு விசாரிக்கின்றனர்.

