/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஸ்டெர்லைட் ஆலையில் பொருட்கள் அகற்றம் துவக்கம்
/
ஸ்டெர்லைட் ஆலையில் பொருட்கள் அகற்றம் துவக்கம்
ADDED : மார் 21, 2025 02:33 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருந்து பொருட்கள் அகற்றும் பணி துவங்கியது.
துாத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை கண்டித்து, 2018ல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர்.
பின், ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு, மூடப்பட்டது. ஆலை விரிவாக்கத்திற்காக நிலம் ஒதுக்கி பிறப்பித்த உத்தரவை அரசு ரத்து செய்தது.
இந்நிலையில், விரிவாக்க பகுதிகளில் உள்ள கட்டுமான இயந்திரங்கள் உட்பட அனைத்து உபகரணங்களையும் திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதிக்க, அரசிடம் ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு அளித்தது.
இதற்கு, 80 நாட்களில் பொருட்களையும், ஆலையில் தேங்கியுள்ள ரசாயன கழிவுகளையும் எடுக்க அரசு அனுமதி அளித்துஉள்ளது.
அதன்படி, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளுக்கான பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள், ஆலையில் உள்ள ரசாயன கழிவுகளை அகற்றும் பணி நேற்று காலை துவங்கியது. துாத்துக்குடி ஆர்.டி.ஓ., தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட உள்ளூர் கண்காணிப்பு குழுவால் இப்பணி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தினமும் ஒரு வருவாய் ஆய்வாளர் கண்காணிப்பில் காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை 80 நாட்களுக்கு பணி நடக்கும்.
ஆலையில் இருந்து அகற்றப்படும் பொருட்கள், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்ட கன்டெய்னர் லாரியில் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து குஜராத் மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாக ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.