/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கூடன்குளம் அணுமின் நிலைய போராட்டம் வாபஸ் : பணிகள் தொடர்ந்தால் முற்றுகை போராட்டம்
/
கூடன்குளம் அணுமின் நிலைய போராட்டம் வாபஸ் : பணிகள் தொடர்ந்தால் முற்றுகை போராட்டம்
கூடன்குளம் அணுமின் நிலைய போராட்டம் வாபஸ் : பணிகள் தொடர்ந்தால் முற்றுகை போராட்டம்
கூடன்குளம் அணுமின் நிலைய போராட்டம் வாபஸ் : பணிகள் தொடர்ந்தால் முற்றுகை போராட்டம்
ADDED : செப் 23, 2011 01:04 AM
வள்ளியூர் : கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி 12 நாட்களாக
நடந்து வந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர்
இவான் அம்புரோஸ் நேற்று முடித்து வைத்தார்.
இடிந்தகரையில் கடந்த 11ம் தேதி முதல் கூடன்குளம் அணுமின் உலையை மூட
வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அதில் 4 பங்குதந்தைகள், 3
கன்னியாஸ்திரிகள், 4 மாற்றுத்திறனாளிகள் உட்பட 127 பேர் சாகும்வரை
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் கலந்து
கொண்டனர். கூடன்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என்றும்,
அதனால் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை
வெளியிட்டார். இந்த அறிக்கை போராட்டம் நடத்தியவர்களுக்கு அதிருப்தியை
ஏற்படுத்தி போராட்டத்தை தீவிரமடைய செய்தது. போராட்டங்களை கண்ட தமிழக
முதல்வர் கூடன்குளம் அணுமின் நிலைய பிரச்னைக்கு சுமூக தீர்வு காணும்
வகையில் அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்க வேண்டுமென்று முதல்வர்
ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் அனுப்பினார். இதனை தொடர்ந்து
பிரதமரின் தூதராக மத்திய அமைச்சர் நாராயணசாமி சென்னை வந்து தலைமை செயலகம்
மற்றும் அணுமின் உற்பத்தி கழக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு
இடிந்தகரைக்கு வந்து போராட்டக்காரர்களை சந்தித்து பேசினார்
அதன்பின் மத்திய அமைச்சர் தமிழக முதல்வரை சந்தித்து போராட்டக் குழுவினரின்
உணர்வுகளை எடுத்துரைத்தார். பின் முதல்வர் கூறிய கருத்துக்களையும் கேட்டு
பிரதமரிடம் எடுத்துரைத்து நல்ல முடிவு பிரதமர் எடுப்பார் என்றுகூறி
சென்றார். இந்நிலையில் தமிழக அரசு போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை
நடத்த குழு ஒன்றை அமைத்து சென்னை வரும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி
போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் தலைமையில் மறைமாவட்ட ஆயர்கள்
தூத்துக்குடி இவான் அம்புரோஸ், கோட்டார் பீட்டர் ரெவிஜூஸ், கன்னியாகுமரி
லியோன்கென்சன், சாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகளார், கடலோர மக்கள்
கூட்டமைப்பு புஷ்பராயன், மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
சிவசுப்பிரமணியன், கன்னியாகுமரி மாவட்ட மகளிர் குழுவை சேர்ந்த லிட்வின்
ஆகிய 10 பேர் கொண்ட குழுவினர் சென்னை சென்று தமிழக முதல்வரை சந்தித்து
கோரிக்கை விடுத்தனர். அப்போது கூடன்குளம் அணுமின் நிலையத்தினை மூட தமிழக
அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும், பொய் வழக்குகளை வாபஸ்
பெற வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு தமிழக முதல்வர்
அமைச்சரவையை கூட்டி கூடன்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்தக் கோரியும்,
பிரதமரை சந்திக்க குழு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், வழக்குகளை
வாபஸ் பெற ஆவணம் செய்வதாகவும் உறுதியளித்தார். அதனையேற்று
போராட்டக்காரர்கள் சென்னையில் வைத்தே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை
தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வருவதாக நேற்று முன்தினம் அறிவித்தனர்.
போராட்டக் குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்துவார்கள் என சென்னையில்
அறிவித்தாலும் இடிந்தகரையில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு போராட்டக்
குழுவினர் இடிந்தகரைக்கு நேற்று காலை 10.30 மணியளவில் வந்தனர். உண்ணாவிரதம்
இருந்தவர்களிடம் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை குறித்து விளக்கம்
அளித்துவிட்டு முதல்வர் அளித்த உறுதிமொழிகளை எடுத்துரைத்து போராட்டத்தை
கைவிடுவதாக அறிவித்தனர். அதன்பின் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான்
அம்புரோஸ் உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு பழ ஜூஸ் கொடுத்து, உண்ணாவிரதத்தை
முடித்து வைத்து அவர் கூறியதாவது: ''கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட
வேண்டுமென்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை
தமிழக முதல்வர் முன்பு வைத்தோம். அதற்கு முதல்வர் அமைச்சரவையில் தீர்மானம்
நிறைவேற்றுவதாகவும், பிரதமரை சந்தித்து பேசுவதற்கு போராட்டக்காரர்கள் கொண்ட
குழு ஒன்றை அமைத்து மத்திய அரசிடம் பேசுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்
கூறினார். இனிமேல் நடக்கும் போராட்டம் மத்திய அரசுக்கு எதிராகத்தான்
செய்வோம் என்றும், அதற்கு மாநில அரசின் ஆதரவு வேண்டுமென்றும் கேட்டுள்ளோம்.
அதற்கு ஆவன செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். அதன்பேரில் உண்ணாவிரத
போராட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்பட்டதால் இந்த சாகும்வரை உண்ணாவிரத
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்'' என்றார். இதுகுறித்து
போராட்டக் குழுவினர் தெரிவித்ததாவது:- 'பேச்சுவார்த்தையின் அடிப்படையில்
தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டதின் பேரில் காலவரையற்ற உண்ணாவிரத
போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வருவதாக சென்னையில்
அறிவித்தோம். முதல்வரிடம் கூறியபடி முறைப்படியாக இந்த உண்ணாவிரத
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 127 நபர்களிடமும், போராட்டம் குறித்து
தொடர்ந்து ஆதரவு தெரிவித்து கலந்து கொண்ட மக்களிடமும் முறைப்படி தெரிவித்து
இன்று (நேற்று) முடித்து வைப்பதாக அறிவித்தோம். அதன்படி போராட்டத்தை
மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் முடித்து வைத்துள்ளார்.தமிழக அமைச்சரவை
தீர்மானத்தை கூடன்குளம் அணுமின் நிலையம் இரண்டு நாட்களுக்குள்
நடைமுறைப்படுத்தவில்லை எனில் அணுமின் நிலையம் முன் மாபெரும் முற்றுகை
போராட்டம் நடத்தப்படும். கூடன்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக
மூடக்கோரி தமிழகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களும் இனி தொடர்ந்து
நடைபெறும். இவ்வாறு தெரிவித்தார்.