தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வீரம் விளையும் பாஞ்சாலங்குறிச்சி வெள்ளிவிழா ஆண்டில் வளர்ச்சிபெறுமா..!

வீரம் விளையும் பாஞ்சாலங்குறிச்சி வெள்ளிவிழா ஆண்டில் வளர்ச்சிபெறுமா..!

வீரம் விளையும் பாஞ்சாலங்குறிச்சி வெள்ளிவிழா ஆண்டில் வளர்ச்சிபெறுமா..!


ADDED : மே 03, 2012 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2012 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கட்டபொம்மனின் வரலாறு கரைந்துவிடும் அபாயம்: தலைமுறைகள் கடந்த நிற்க அவசர நடவடிக்கைகள் அவசியம்



ஓட்டப்பிடாரம்.மே.3-வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சிசெய்த பாஞ்சாலங்குறிச்சியின் புகழ் உலக முழுவதும் பரவ தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா ஆண்டில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர். தற்போது நினைவுச்சின்னமாக காட்சியளிக்கும் கோட்டை யை சீரமைத்து, மேலும் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து சுற்றுலாப்பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம் முனைப் புடன் செயல்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டபொம்மன் : அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஓட்டப்பிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம் பெற்றிருந்தார். இவரது பூர்விகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்ட பொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப் பின் அரச கட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீரகட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்றும் மக்களால் அழைக்கப்பட்டார். ஜனவரி 3 ,1760 அன்று ஆறுமுகத்தம்மாள்-திக்குவிசயகட்டபொம்மு தம்பதியருக்கு பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டியகட்டபொம்மன். பிப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது மனைவி வீரசக்கம்மாள். குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார். கும்பினியார் (அதாவது இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வந்த கிழகிந்திய கம்பெனியர்) கி.பி.1793 இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு வந்தார். 1797-1798இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்ட கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798இல் ராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார்.

செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்து விடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9, 1799இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பானர்மேன் உத்தரவுப்படி கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை : கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலங்குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.2.1801 இல் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801இல் அதனைக் கைப்பற்றியது. காளையார்கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து வெள்ளையர்கள் நீக்கினர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.ஆனால் வீரபாண்டியகட்டபொம்மனின் வீரமும், சுதந்திர தாகமும், ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல் கடைசிவரை போரிட்டதும் இன்று வரை மக்களின் மனதில் இருந்து நீங்கவே இல்லை. இன்று தமிழ்நாட்டில் எந்த ஒரு மூலையில் நின்று கொண்டும் பாஞ்சாலங் குறிச்சி என்ற பெயரை உச்சரித்தாலே போதும் வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த இடமாயிற்றே என்று மக்கள் சொல்லுமளவுக்கு கட்டபொம்மனின் புகழ் பரவிஇருக்கிறது.

1974 ல் மீண்டும் உருவானது புதிய கோட்டை : அந்த புகழுக்கு மேலும் புகழ்சேர்க்கும் விதமாக 1974ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையை போல் ஒரு கோட்டையினை கட்ட அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத்துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது. தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள், நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வீரபாண்டியகட்டபொம்மனின் வரலாறு பள்ளிப்பாடத்துடன் நின்றுபோனதுஉண்டு. ஆனால் சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்த வீரபாண்டியன்கட்டபொம்மன் படம் வெளிவந்த பிறகுதான் கட்டபொம்மனின் வரலாறு உலகம் முழுவதும் தெரியவந்தது. அந்த படத்தில் ''இந்த மண்கோட்டையை வைத்துக்கொண்டுதானா மனக்கோட்டை கட்டினான் கட்டபொம்மன்''என்று பானர்மேன் வசனம் பேசும் போது இன்றும் நம் கண் முன்னால் அந்த கோட்டை வந்துபோகிறது. படத்தில் பார்க்கும் அந்த கோட்டையின் பிரமிப்பு இன்றும் பாஞ்சாலங்குறிச்சியில் காணமுடிகிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.

பாஞ்சாலங்குறிச்சியின் புகழ் பரவுமா..! வெள்ளிவிழா ஆண்டில் செய்யவேண்டியது என்ன

கட்டபொம்மனின் வீரமும், புகழும் மக்கள் மனதில் இருந்து இன்றல்ல, என்றென்றும் நீங்காது. ஆனால் அவன் வாழ்ந்து சரித்திரம் படைத்த அந்த புண்ணிய பூமியும், வீரம் விளைந்த பூமியுமான பாஞ்சாலங்குறிச்சி மட்டும் நாளடைவில் மறைந்துவிடும் என்றே தோன்றுகிறது. கட்டபொம்மனின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கவேண்டும் என்ற நோக்கில் அவரது நினைவு சின்னமாக கட்டப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பராமரிப்பு இல்லாமல் பாழ்பட்டுவிடக்கூடாதே என்பதே மக்களின் வேண்டுகோள்.

தினந்தோறும் பராமரிப்பு அவசியம் : கோட்டை பராமரிப்பு என்பது ஆண்டுக்கு ஒருமுறை என்றளவில் இருக்ககூடாது, நாள்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். பாஞ்சாலங்குறிச்சியில் இன்றும் அந்த கோட்டை கம்பீரமாக எழுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் மாநிலம் முழுவதும் பரவவேண்டும். விடுமுறைநாட்களில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு சுற்றுலாத்துறை சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறு அடங்கிய கையேடு வழங்கப்படவேண்டும். இலவசமாக வழங்க வேண்டாம். குறைந்த ரூபாயில் வழங்கினால் போதும். ஏராளமான மக்கள் வாங்கிச்சென்று படிப்பதன் மூலம் கட்டபொம்மனின் புகழ் தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கும்.

ஆர்வமுள்ள சுற்றுலா வழிகாட்டிகள் வேண்டும்;

கோட்டையை காணவரும் மக்களுக்கு பொறுமையாக கட்டபொம்மனின் வரலாறுகளை எடுத்துச்சொல்ல சுற்றுலா வழிகாட்டிகள் நியமிக்கப்படவேண்டும். கட்டபொம்மனின் கோட்டை சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. 30 ஏக்கரில் ஒரு சில ஏக்கர் மட்டுமே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இன்னும் பல ஏக்கர்கள் ஆய்வு செய்யப்படாமலே இருக்கிறது. புதர்மண்டிக்கிடக்கும் அனைத்து இடங்களையும் தொல்பொருள் ஆராய்ச்சி செய்து புதைந்துகிடக்கும் பல வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவரவேண்டும். பாஞ்சாலங்குறிச்சியில் கிடைத்த பல பொருட்கள் கன்னியாகுமரி, மற்றும் சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்கள் பாராட்டப்படவேண்டியது என்றாலும், பாஞ்சாலங்குறிச்சியில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு புதிய அருங்காட்சியத்தை கோட்டையின் அருகிலேயே அமைக்கவேண்டும்.

கோட்டையில் ஒளிஒலி காட்சி : கோட்டையில் தற்பொது கட்டபொம்மனின் வரலாறு ஓவியங்களாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது. அவைகளை எல்லாம் தொகுத்து ஒளிஒலிகாட்சியாக அமைக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். பாஞ்சாலங்குறிச்சியில் ஆங்கிலேயர்களுக்கும் வீரபாண்டியகட்டபொம்மனுக்கும் இடையே நடந்த போரில் கொல்லப்பட்ட ஆங்கிலேய தளபதிகளின் கல்லறைகள் இன்றும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு அருகில் உள்ளது. ஆனால் இன்று அந்த கல்லறைகள் எல்லாம் புதர்மண்டி சமூக விரோதிகளின் கூடாராமாக மாறிவருகிறது.

காணாமல் போன ஆங்கில தளபதிகளின் கல்லறைகள் : கோட்டையை காணவரும் சுற்றுலாப்பயணிகள் பலர் கல்லறைகளின் விபரம் அறிந்து அங்கு செல்ல வழிகேட்கின்றனர். ஆனால் அங்குள்ளவர்கள் கல்லறைகள் இருக்கும் இடத்தைப்பற்றி சொல்லி தயவு செய்து அங்கு செல்லவேண்டாம் என்று அட்வைஸ் செய்து திருப்பி அனுப்பிவிடுகின்றனர். அந்தளவுக்கு மிகவும் மோசமாக கல்லறைகள் இருக்கும் இடங்கள் காட்சியளிக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக இருக்கும் அந்த ஆங்கிலேய தளபதிகளின் கல்லறைகள் சீரமைக்கப்படவேண்டும். காரணம் கட்டபொம்மனின் வீரத்திற்கு அந்த கல்லறைகளே சாட்சி. தூத்துக்குடி மாவட்டம் இந்திய சுதந்திரபோராட்டத்தில் முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்தியா முழுவதும் சுதந்திரப்போராட்டம் தீவிரம் அடைந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கட்டபொம்மன். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் ஆங்கிலேயர்களை முதன் முதலில் தைரியமாக எதிர்த்த வீரன் கட்டபொம்மன்.

திருநெல்வேலியில் இருந்து பிரிந்து தூத்துக்குடி தனிமாவட்டமாக உருவாகி இன்று வெள்ளிவிழா கொண்டாடிவருகிறது.

இந்த வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் புதிதாக சுற்றுலா தலங்கள் உருவாக்குவது ஒருபுறம் இருந்தாலும் இருக்கிற வரலாற்று சிறப்புவாய்ந்த இந்த இடத்தை போற்றிப்பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம்.

இப்படியும் ஒரு சில ஆட்சியாளர்கள்

தமிழக அரசியல்வாதிகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் அதிக தொடர்பு உண்டு. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு பிரதான நுழைவுவாயில் வழியாக சென்றால் பதவிபோய்விடுமாம், அதேபோல் பாஞ் சாலங்குறிச்சி கோட்டைக்கு வந்தால் பதவி போய் விடுமாம். இந்த நம்பிக்கை ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. பாஞ்சாலங்சிகுறிச்சி மண்ணில் முயல் நாயை துரத்தியதை கண்டு இந்த இடத்தில் கோட்டை கட்டி ஆட்சிசெய்தால் எதிரிகளை துவம்சம் செய்யலாம் என்று எண்ணி கோட்டை கட்டி ஆட்சிசெய்தான் வீரபாண்டியகட்டபொம்மன். அவன் நினைத்ததுபோல் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்ப னமாக இருந்தான். கடைசிநேரத்தில் தூக்கு கயிற்றை முத்தமிட்டு வீரத்துடனே மரணத்தை எதிர்கொண்ட மிகப்பெரிய வெற்றியாளன் வீரபாண்டிய கட்டö பாம்மன். இப்படிப்பட்ட புண்ணியபூமியில் தங்கள் கால்பட இன்றைய ஆட்சியாளர்கள் புண்ணியம் செய்தி ருக்கவேண்டும். அதைவிடுத்து யாரோ ஒருவர் சொன்னதை கேட்டு பாஞ் சாலங்குறிச்சியின் பக்கமே செல்லாமல் சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது 21 ஆம் நூற்றாண்டில் கேலிகூத்தாக இருக்கிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us