/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தி.மு.க., - எம்.எல்.ஏ., அண்ணன் கைது
/
தி.மு.க., - எம்.எல்.ஏ., அண்ணன் கைது
ADDED : மே 30, 2025 01:15 AM

துாத்துக்குடி:விவசாயி மனைவியை தாக்கியதாக தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் சகோதரரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் தாலுகா, தாப்பாத்தி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி மாரிமுத்துவுக்கு சொந்தமான விவசாய நிலம், ஓட்டப்பிடாரம், சிலோன் காலனியில் உள்ளது. அந்த நிலத்தை அபகரிக்க முயன்றதாக, ஓட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., சண்முகையாவின் அண்ணன் அயிரவன்பட்டி முருகேசன் மீது புகார் எழுந்தது.
விசாரணை நடத்திய ஓட்டப்பிடாரம் போலீசார், முருகேசன், 61, உட்பட 8 பேர் மீது மார்ச் 3ல் வழக்கு பதிவு செய்தனர். மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மாரிமுத்து, அவரது மனைவி முத்து மாடத்தி ஆகியோர் நேற்று திருச்செந்துார் கோவிலுக்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
முத்தையாபுரம் மதிகெட்டான்ஓடை பாலத்தின் அருகே காரில் சென்று அவர்களை வழிமறித்த முருகேசன், சிலோன் காலனியில் உள்ள நிலத்தை தன் பெயருக்கு எழுதி தருமாறு மிரட்டியதாக தெரிகிறது. மேலும், அவர்களின் மொபைல் போனை பறித்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
அச்சமடைந்த முத்து மாடத்தி, முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, முருகேசனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், நேற்று இரவு வரை அவரிடம் விசாரணை நடத்தினர். மூன்று மணி நேரத்திற்கு பின், ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்து, அவரை சிறையில் அடைத்தனர்.