/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி துறைமுகத்தில் கன்டெய்னர் லாரிகள் விதிமீறல் சுங்கத்துறையில் ஏற்றுமதியாளர்கள் புகார்
/
துாத்துக்குடி துறைமுகத்தில் கன்டெய்னர் லாரிகள் விதிமீறல் சுங்கத்துறையில் ஏற்றுமதியாளர்கள் புகார்
துாத்துக்குடி துறைமுகத்தில் கன்டெய்னர் லாரிகள் விதிமீறல் சுங்கத்துறையில் ஏற்றுமதியாளர்கள் புகார்
துாத்துக்குடி துறைமுகத்தில் கன்டெய்னர் லாரிகள் விதிமீறல் சுங்கத்துறையில் ஏற்றுமதியாளர்கள் புகார்
ADDED : ஜன 04, 2025 11:02 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் சரக்குகள் கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதில், இறக்குமதியாளர் குறிப்பிடும் பகுதி வரை சரக்குகளை கொண்டு செல்வதற்காக வரிவிலக்கு பெறப்படுகிறது.
வரி விலக்கு பெற்று திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் சரக்குகள், அங்கு இறக்கப்பட்ட பிறகு, அதே லாரியில் ஏற்றுமதி சரக்குகளை எந்தவித அனுமதியும் பெறாமல் துாத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், திருப்பூர் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து, சுங்கத்துறை இணை கமிஷனரிடம் அவர்கள் அளித்த மனு:
துாத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி பொருட்கள், கன்டெய்னர் லாரிகள் மூலம் கோவை, திருப்பூர், கரூர் பகுதிகளுக்கு வரிவிலக்கு பெற்று கொண்டு வரப்படுகிறது. அந்த லாரிகள் திரும்பிச் செல்லும் போது பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என, சட்டம் உள்ளது.
அனைத்து துறைமுகங்களிலும் இது நடைமுறையில் உள்ளது. ஆனால், துாத்துக்குடியில் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. ஆறு மாதமாக தொடர்ந்து இதுகுறித்து புகார் அளித்து வருகிறோம்.
விதிமீறி சரக்குகளை ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகள் பொருட்களை துறைமுகத்தில் இறக்கக்கூடாது என, சில மாதங்களுக்கு முன் சுங்கத்துறையினர் ஒரு உத்தரவு பிறப்பித்தனர்.
15 நாட்கள் மட்டுமே அது நடைமுறையில் இருந்தது. மீண்டும் பழைய நிலையே நீடித்து வருகிறது. ஒரு பெட்டிக்கு 1,000 ரூபாய் வீதம் பணம் கொடுத்து சரக்குகளை துறைமுகத்தில் இறக்கும் நிலை உள்ளது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, திருப்பூர் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
கோவை பகுதியில் இருந்து ஒரு நாளைக்கு, 50 கன்டெய்னர் லாரிகளில் பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. சுங்கத்துறையினரின் அனுமதி இல்லாமல் சரக்குகளை துறைமுகத்தில் இறக்க வாய்ப்பு இல்லை. கப்பல் துறை அமைச்சகத்திற்கு புகார் அனுப்பி உள்ளோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகள் உடந்தை
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பரமசிவம், தாமரை வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது:
கன்டெய்னர் லாரி விதிமீறலால் அரசுக்கு மாதம், 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. சட்டவிரோத நடவடிக்கையால் மாதம், 30 கோடி ரூபாய் வரை ஏற்றுமதி யார்டு உரிமையாளர்கள் லாபம் சம்பாதிக்கின்றனர். சுங்கத்துறையிலும் சிலர் உடந்தையாக உள்ளனர். விதிமீறி கன்டெய்னர் லாரிகளில் ஏற்றப்படும் சரக்குகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு பெற முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.