/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துாரில் கந்தசஷ்டி திருவிழா துவக்கம்
/
திருச்செந்துாரில் கந்தசஷ்டி திருவிழா துவக்கம்
ADDED : நவ 03, 2024 03:13 AM

திருநெல்வேலி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
இதையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 6:00 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து மூலவருக்கு உச்சி கால தீபாராதனை, பின்னர் யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு மகா தீபாராதனை நடந்தது.
பின்னர் தங்கசப்பரத்தில் ஜெயந்திநாதர் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சண்முக விலாச மண்டபம், மாலையில் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் தங்கத்தேரில் பிரகாரம் வலம் வந்து கோயிலை அடைந்தார். பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக அங்கபிரதட்சணம் செய்தனர்.
முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ. 7ல் நடக்கிறது. அன்று மாலை 4:30 மணிக்கு கோயில் முன்பாக கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்கிறார். நவ.8 இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.
பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பதற்காக கோயில் வெளி கிரி பிரகாரங்களில் 18 இடங்களில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர், கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கோபுரங்களுடன் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 7ல் கும்பாபிஷேகம்
இக்கோயிலில் ரூ. 300 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடக்கிறது. இவை முடிந்தபின் 2025 ஜூலை 7ல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.