/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடியில் வேன் கடத்தல் காவலர் மீது மோதி தப்பியவர் கைது
/
துாத்துக்குடியில் வேன் கடத்தல் காவலர் மீது மோதி தப்பியவர் கைது
துாத்துக்குடியில் வேன் கடத்தல் காவலர் மீது மோதி தப்பியவர் கைது
துாத்துக்குடியில் வேன் கடத்தல் காவலர் மீது மோதி தப்பியவர் கைது
ADDED : அக் 18, 2024 03:09 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி சிப்காட் பகுதியில், 'விவி டைட்டானியம் பிக்மென்ட்ஸ்' என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலைசெய்யும் பணியாளர்களை வேன் மூலம் அழைத்துச் சென்று திரும்ப விடுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை வேனில் பணியாளர்களை ஏற்றுவதற்காக முத்தையாபுரம் பகுதிக்கு டிரைவர் சேதுராஜ், 34, என்பவர் சென்றார்.
சாலையோரம் வேனை நிறுத்தி விட்டு டீ குடிப்பதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென அந்த வாகனத்தை கடத்திச் சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த சேதுராஜ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். திருச்செந்துார் சாலையில் வேன் செல்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஆத்துார் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சந்தனகுமார், அந்த வழியாக டூ - வீலரில் வந்த வாழவல்லான் பகுதியைச் சேர்ந்த பால்ஐசக் அன்புராஜ், 28, என்பவருடன் சென்றுள்ளார்.
குரும்பூர் அருகே தண்ணீர் பந்தல் பாலம் அருகே சென்றபோது, எதிரே கடத்தப்பட்ட வேன் வந்துள்ளது. இதையடுத்து, அந்த வேனை காவலர் சந்தனகுமார் நிறுத்த முயன்றார். ஆனால், வேனை அவர்கள் சென்ற டூ - வீலர் மீது மோதிவிட்டு மர்மநபர் நிறுத்தாமல் சென்றார்.
இதில், காவலர் சந்தனகுமார், அவருடன் வந்த பால்ஐசக் அன்புராஜ் மற்றும் அந்த வழியாக டூ - வீலரில் சென்ற கொழுவைநல்லுாரைச் சேர்ந்த வின்சென்ட், 32, ஆகியோர், 30 மீட்டர் துாரம் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்ட மர்மநபர் வேனை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பினார்.அங்கிருந்தவர்கள் காயமடைந்த மூவரையும் மீட்டு உடனடியாக ஆத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக காவலர் சந்தனகுமார் நாகர்கோவிலுக்கும், பால்ஐசக் அன்புராஜ், வின்சென்ட் ஆகியோர் துாத்துக்குடிக்கும் கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குரும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே, வேனை கடத்தி சென்றதாக மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற தமிழன்பன், 26, என்பவரை திருச்செந்துார் புறக்காவல் நிலை போலீசார் பிடித்தனர்.
பின்னர், அவர் குரும்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். திருச்செந்துார் கோவிலுக்கு செல்வதற்காக வேனை கடத்தியதாக போலீசாரிடம் சந்தோஷ் தெரிவித்துள்ளார். அவரது பதிலில் திருப்தி அடையாத போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.