/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாய பனிமய மாதா சர்ச் திருவிழா சப்பரத்தில் மாதா கோலாகல பவனி
/
துாய பனிமய மாதா சர்ச் திருவிழா சப்பரத்தில் மாதா கோலாகல பவனி
துாய பனிமய மாதா சர்ச் திருவிழா சப்பரத்தில் மாதா கோலாகல பவனி
துாய பனிமய மாதா சர்ச் திருவிழா சப்பரத்தில் மாதா கோலாகல பவனி
ADDED : ஆக 06, 2025 03:23 AM

துாத்துக்குடி:துாத்துக்குடியில் உள்ள புனித பனிமய மாதா சர்ச் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு நடந்த அன்னையின் திருவுருவ பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
புகழ் பெற்ற கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச்களில் ஒன்றான துாத்துக்குடி துாய பனிமய மாதா சர்ச் திருவிழா, ஜூலை 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழாவின் 11 நாட்களும் தினமும் ஜெபமாலை, மறையுரை மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தன.
திருவிழாவின் நிறைவு நாளான நேற்று காலை 7:30 மணிக்கு மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடந்தது.
காலை 9:00 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில், மறைமாவட்ட மக்களுக்கான திருப்பலி நடந்தது. 10:00 மணிக்கு உபகாரிகளுக்கான திருப்பலியை முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் நடத்தினார். மாலை 5:00 மணிக்கு பெருவிழா நிறைவுத் திருப்பலி நடந்தது. சர்ச் நிகழ்ச்சிகளில் மறைமாவட்ட முதன்மை குரு, பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் இறைமக்கள் பங்கேற்றனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நகர வீதிகளில் பொன் மகுடம் தரித்த துாய பனிமய மாதாவின் திருவுருவ சப்பர பவனி இரவு 7:00 மணிக்கு நடந்தது.
சர்ச்சின் பின்பகுதியில் இருந்து புறப்பட்ட பவனி பெரியகடை வீதி, கிரேட் காட்டன் சாலை, கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் சர்ச் வளாகத்தை அடைந்தது.
சப்பரபவனியில் சர்ச் பாதிரியார் ஸ்டார்வின், உதவி பாதிரியார் பிரவீன் ராசு மற்றும் இலங்கை, மலேசியா உட்பட வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 'மரியே வாழ்க' என முழக்கமிட்டபடி சென்றனர்.
திருவிழாவை முன்னிட்டு, எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் தலைமையில், 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவிழா காரணமாக துாத்துக்குடி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

