ADDED : செப் 24, 2024 07:12 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் அனல் மின் நிலையம் கட்டும் பணிகள் மற்றும் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதில், பீஹார், ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலை பார்க்கின்றனர்.
இந்நிலையில், குலசேகரன்பட்டினம் பைபாஸ் சாலையோரம் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில், வட மாநில வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரித்தனர்.
அவர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் பிகிரா, 31, என்பவர் என தெரிந்தது. உடன்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வந்த அவர், குலசேகரன்பட்டினத்தில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
தங்கியிருந்த இடத்தின் அருகே சிறிது துாரத்தில் அவர் இறந்து கிடந்ததால், உடன் பணியாற்றியவர்களால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.