/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பஸ் வசதி கேட்டு மறியல் போலீசார் கொடூர தாக்குதல்
/
பஸ் வசதி கேட்டு மறியல் போலீசார் கொடூர தாக்குதல்
ADDED : அக் 23, 2025 12:45 AM

துாத்துக்குடி: பஸ் வசதி கேட்டு மறியலில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் கொடூரமாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், பொட்டலுாரணியில் மீன் கழிவு ஆலைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள், சங்கரநாராயணன் என்பவர் தலைமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை, துாத்துக்குடி -- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பொட்டலுாரணி விலக்கில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்களிடம் துாத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி., சுதிர் தலைமையிலான போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதில், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது.
போலீசார் கொடூரமாக தாக்கியதில் ராணி என்ற பெண்ணும், செல்வநாராயணன் என்பவரும் காயமடைந்தனர். இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் எஸ்.எஸ்.ஐ., யோக்கோபு என்பவர் காயமடைந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட, 116 பேரை போலீசார் கைது செய்தனர்.