/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
காவல் துறையினர் உதவியோடு நள்ளிரவில் மணல் கொள்ளை
/
காவல் துறையினர் உதவியோடு நள்ளிரவில் மணல் கொள்ளை
ADDED : ஜன 10, 2025 02:17 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில், விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வைப்பாற்றில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.
குளத்துார் மற்றும் விளாத்திகுளம் காவல் துறையினர் அதற்கு உடந்தையாக செயல்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, விளாத்திகுளம், குளத்துார், வைப்பார், எட்டையபுரம், சங்கரலிங்கபுரம், காடல்குடி, பனையடிப்பட்டி, வேடபட்டி உட்பட பல பகுதிகளில் மாட்டு வண்டிகள் வாயிலாக வைப்பாற்றில் இருந்து ஆற்று மணல் தினமும் நள்ளிரவில் திருடப்படுகிறது.
மாட்டு வண்டி வாயிலாக ஆற்றுமணல் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பணியில் இருக்கும் இரவு போலீசார், ஒரு மாட்டு வண்டிக்கு 300 ரூபாய் வீதம் வசூலித்து கடத்தலை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் காவல்துறைக்கு மாமூல் கொடுத்துவிட்டோம் என்ற தைரியத்தில் இ.சி.ஆர்., சாலை, எட்டையபுரம் சாலை போன்ற பிரதான சாலைகளில் மாட்டு வண்டியில் மணலை கடத்திச் செல்கின்றனர்.
போலீசார், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, மணல் கொள்ளைக்கு துணைபோகும் காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.